யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்து பிறப்புக்காலம்
2020-01-04




முதல் வாசகம்

கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 98: 1. 7-8. 9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, �இதோ! கடவுளின் செம்மறி!'' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, �என்ன தேடுகிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், �ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'' என்று கேட்டார்கள். `ரபி' என்னும் எபிரேயச் சொல்லுக்குப் `போதகர்' என்பது பொருள். அவர் அவர்களிடம், �வந்து பாருங்கள்'' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, �மெசியாவைக் கண்டோம்'' என்றார். `மெசியா' என்றால் `அருள்பொழிவு பெற்றவர்' என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, �நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா' எனப்படுவாய்'' என்றார். `கேபா' என்றால் `பாறை' என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தேடுதலும் தங்குதலும் !

இயேசு தம்மைப் பின் தொடர்ந்த இரு சீடர்களிடம் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டனர். தேடுதலுக்கும், தங்குதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையில் வேலை செய்யவிரும்பும் ஓர் இளைஞன் தனது சொந்த ஊரில் இருந்துகொண்டே வேலை தேடினால், கிடைப்பது அரிதுதான். ஆனால், அதே இளைஞன் சென்னை சென்று, அங்கேயே தங்கி, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டால், ஏதாவது ஒரு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைவனைத் தேடுபவர்கள் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி, இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பலரும் சாலக்குடி போன்ற தியான இல்லங்களுக்கோ, வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்கோ சென்று தங்கியிருந்து இறையனுபவம் பெறுவதை நாம் அறிவோம். தங்கியிருத்தலில் நேரம் செலவழிப்பது முகாமையான ஒன்று. "நேரமில்லை", "பிசியாக இருக்கிறோம்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இறைவனைச் சந்திக்க முடியாது. இறைவனுக்காக நேரம் செலவழிக்க, அவரோடு தங்கியிருக்க முன்வருவோம்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலக இன்பங்களைவிட உம்மைத் தேடவும், உம்மோடு தங்கியிருந்து நேரம் செலவழிக்கவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.