யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2019-12-24

கிறிஸ்துப்பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 9:1-6,திருப்பாடல் 6(95):1-2a.2b-3.11-12.13.,திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14. ,புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-14)




எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.


திருப்பலி முன்னுரை

நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்

இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம். திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன? இன்றைய கொண்டாடங்களில் இயேசுவே மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.

நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!



முதல் வாசகம்

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்:
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 9:1-6

ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர். அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 6(95):1-2a.2b-3.11-12.13.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.

அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.

இரண்டாம் வாசகம்

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14.

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், ' அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் ' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ' என்று கடவுளைப் புகழ்ந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸதுவைக் கொடுத்த எம் இறைவா!

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் மகிழ்ச்சியில் எம் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் என்று உலகமக்கள் அனைவரின் உள்ளத்தில் உண்மையான மகிழ்ச்சியையும், அமைதியையும் நிறைவாய் நிலைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

பல்வேறு காரணங்களால் இன்றைய இத் திருப்பலியில் பங்குகொள்ள முடியாதிருப்போர், நோயுற்றிருப்போர், வேதனைகளுக்குள் வாழ்வோர், சிறையிலிருப்போர், பணயக் கைதிகளாயிருப்போர் அனைவரும் நீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் பெற்று மகிழ அருள் கூர்ந்தருள வேண்டுமென்று பிறந்திருக்கிற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: என்ற தந்தையே!

எம் இளைஞர்களை ஆன்மீகத்திலும், அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையும் வாழ்வுக் கொடுக்கும் இறங்கி வந்த எம் இறைவா!

இன்று எம் உலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர், மற்றவருக்கு உதவக்கூடிய பிறன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வு வளம் பெறத் தேவையான அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,

வாழ்வின் குறிக்கோளை அறிந்துகொள்ளாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கிய பாதையில் பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்!

இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம் முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)

கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது. கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.