யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2019-12-23

புனித யோவானின் பிறப்பு.




முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6

படைகளின் ஆண்டவர் கூறியது: �இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ����� ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக்காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும். இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
திருப்பாடல் 25: 4-5. 8-9. 10,14

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, �வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், �உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, �குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, �இக் குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, �இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக்கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவரு டைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்'' (மத்தேயு 1:18)

மரியாவுக்குக் கடவுள் அளித்த மாபெரும் மாண்பு அவரைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டது ஆகும். கடவுளின் தாயாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட மரியாவைக் கடவுள் தொடக்கத்திலிருந்தே பாவத்திற்கு உட்படாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. மரியாவைக் கடவுளுக்கு நிகராக நாம் கருதுவதில்லை. ஆனால், கடவுளின் படைப்பாக இருந்தாலும் மரியா மனித மீட்பு வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளதால் அவருக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்பது தெளிவு. மரியா கடவுளை முழுமையாக நம்பினார். கடவுளும் மரியாவைத் தம் வல்லமையால் நிரப்பினார். கடவுளின் செயலால் மரியா பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதோடு கடவுளின் மகனாகிய இயேசுவையும் கன்னிமை குன்றாமல் கருத்தரித்தது இறைவனின் வியத்தகு செயலே. மரியாவின் வாழ்வில் கடவுள் புரிந்த அரும்செயலை யோசேப்பு முதலில் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கடவுளின் திட்டம் என்னவென்று அவர் உணரத் தொடங்கியதும் மரியாவைத் தம் மனைவியாக ஏற்றுக் கடவுளின் திருவுளத்திற்கேற்ப ஒத்துழைக்க முன்வந்தார். இதனால் அவர் ''நேர்மையாளர்'' என அறியப்படுகிறார் (மத் 1:19).

கடவுளின் வல்லமை என்பது இயற்கைக்கு எதிரான விதத்தில் கடவுளால் செயல்பட முடியும் என்பதை மட்டும் குறிப்பதில்லை. கடவுள் வல்லமை மிக்கவர் என்பது அவர் மனிதரின் நன்மைக்காக அரும் செயல்களைச் செய்கிறார் என்றே பொருள்படும். கடவுளின் ஆவி நம்மை ஆட்கொள்ளும்போது நாமும் கடவுளின் வல்லமையால் நிரப்பப்படுவோம். அந்த ஆவியின் தூண்டுதலை நாம் உளமார ஏற்று அவர் காட்டும் வழியில் நடந்தால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறுவோம். அப்போது மரியாவைப் போல நாமும் ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது'' எனப் பாடிப் புகழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, அன்னை மரியாவைப் போல நாங்களும் உமது திருவுளத்தை நிறைவேற்ற எப்போதும் முன்வர அருள்தாரும்.