யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2019-12-11




முதல் வாசகம்

எல்லாம் வல்ல ஆண்டவர் �சோர்வுற்றவருக்கு'' வலிமை அளிக்கின்றார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. "என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை'' என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல்103: 1-2. 3-4. 8,10

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். �

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: �பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்'' (மத்தேயு 18:14)

சிறு குழந்தைகளை இயேசு அன்போடு வரவேற்றார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உண்டு. குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத அக்காலத்தில் உண்மையான சீடர் குழந்தையைப் போல மாற வேண்டும் என்று இயேசு கேட்டது வியப்பாகத் தோன்றலாம். குழந்தைகள் தம் பெற்றோரையோ வேறு பெரியவர்களையோ சார்ந்துதான் வாழ முடியும். அவர்களுடைய நலமான வளர்ச்சிக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் தேவை. சீடரும் சிறுபிள்ளைகளைப் போல இருக்க வேண்டும் என்பது அவர்கள் கடவுள்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் எனப் பொருள்படும். கடவுளைச் சார்ந்துதான் நம்மால் வாழ முடியுமே ஒழிய, நம் சொந்த சக்தியால் நாம் எதையும் சாதிக்க இயலாது. எனவே, கடவுளின் அரசில் நாம் பங்குபெற வேண்டும் என்றால் நாமும் கடவுளின்முன் சிறுபிள்ளைகளைப் போல மாற வேண்டும். இவ்வாறு இயேசுவின் சீடராக மாறுகின்றவர்கள் நன்னெறியில் நடக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அவர்களுக்கு யாதொரு தீங்கும் ஏற்படலாகாது என்பதில் கடவுள் கருத்தாயிருக்கிறார். -- சிறு பிள்ளைகளைப் போல நாமும் கடவுளை அணுகிச் செல்லும்போது நமது மன நிலை மாற்றம் பெற வேண்டும். கடவுளையே முழுமையாக நம்பி நாம் வாழும்போது நமது சொந்த விருப்பப்படி நடவாமல் கடவுளின் விருப்பப்படி நடக்க நாம் முயல்வோம். அதுபோலவே, பிறரும் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருக்க நாம் அவர்களுக்குத் துணை செய்வோம். தவறிப்போன ஆட்டினைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கின்ற ஆயரைப் போல நம் கடவுளும் நம்மைத் தேடி வருகின்றார். அவரது அன்பிலிருந்து அகன்று சென்றுவிடாமல் நாம் அவர் காட்டுகின்ற வழியில் எந்நாளும் நடந்திட வேண்டும். அப்போது இயேசுவின் உண்மையான சீடராக நாம் வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, சிறு பிள்ளைகளின் உள்ளத்தோடு உம்மையே எந்நாளும் நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.