யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2019-12-05




முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.
திருப்பாடல் 118: 1,8-9. 19-21. 25-27

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21,24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: �என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நிறைவு தரும் ஆட்சி

அரசனின் கடமை தன் ஆளுகைக்குட்பட்ட மக்களை குறையின்றி பேணி காப்பது. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்." ஆகவே, காத்தல் அரசனின் சிறப்புப் பண்பு. எனவேதான் படை வீரர், "நீ ய+தர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" (லூக் 23'37) என்கின்றனர். குற்றவாளிகளுள் ஒருவனும், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று கோரிக்கை வைக்கிறான்.

இந்த காப்பாற்றும் பண்பு நம் இறைவனில் நிறைவாக உள்ளதை விவிலியம் முழுவதும் காண்கிறோம். இன்னும் சிறப்பாக ஏழைகள், பாதிக்கப்பட்டோர்,துன்புறுவோர்,பாவிகள் இவர்களை அவர் காக்கும் விதமே அலாதியானது. "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்."(மத் 5'45) "இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்."(எசாயா 49 :16)"அவர் உம் கால் இடறாதபடி பாhத்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்."(தி.பா 121 :3); "நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்." (தி.பா121'8) ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."( யோவா 10 :11) "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்." ( எசா 53 :4) நம் இறைவன் காக்கும் தன் உயிர் கொடுத்து காக்கும் தெய்வம். உண்மை அரசர். அவரது அரசின் மக்களாயிருப்பது நமக்குப் பெருமை. அவரை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தி வாழ்வோம். அவரது அரசில் வாழும் நமக்கு குறை இருக்காது.எல்லாம் நிறைவாக இருக்கும்.

மன்றாட்டு:

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும்.