யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2019-11-10

(இன்றைய வாசகங்கள்: மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14,திருப்பாடல்கள் 17: 1. 5-6. 8,15,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38)
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். 
உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.


திருப்பலி முன்னுரை

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக, வாழ்வோரின் கடவுள்.

உயிர்ப்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் முப்பதிரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாகிய நாம் அனைவரும் உயிர்த்தெழுதலின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வுலக வாழ்வில் அதிக ஆர்வம் காட்டாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இறைவன் தரும் நிலை வாழ்வை நமது சந்தேகங்களாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் இழந்துவிடாதவாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். நாம் உயிர்ப்பின் மக்களாய், வானதூதரைப் போன்று பேரின்ப வாழ்வில் பங்குபெறத் தயாராகுமாறு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, வாழ்வோரின் கடவுள் தரும் நிலைவாழ்வுக்கு நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14

அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப் பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், ``நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்'' என்றார். தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், ``நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே'' என்று கூறினார். அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; ``நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்'' என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள். அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில், ``கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல்கள் 17: 1. 5-6. 8,15

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக! சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38

அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, ``போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு சதுசேயரிடம், ``இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். வர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

என்றும் வாழ்பவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நீர் அளிக்கும் உயிர்ப்பின் வாழ்வை இறைமக்கள் உரிமையாக்க உழைக்குமாறு உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வோரின் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம்.

நீர் என்றும் வாழ்பவர். சாவைக் கடந்தவர். உம்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் முடிவில்லாத வாழ்வைத் தருபவர். உமக்கு நன்றி கூறுகிறோம். இன்றைய நாளில் உமது விசுவாசிகள் அனைவரையும், குறிப்பாக யாரும் நினையாத, மறக்கப்பட்ட ஆன்மாக்களை நினைவுகூர்ந்து மன்றாடுகிறோம். அனைவருக்கும் இன்பமும், ஒளியும், அமைதியும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கின்ற தந்தையே இறைவா!

பாவப் பழக்க வழக்கங்கள், போதைப் பொருள் பாவனை, குடிவெறி, சூது போன்ற நச்சு வலைக்குள் அகப்பட்டு வெளிவரமுடியாமல் வாழ்வையை அழித்துக்கொள்ளும் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று: ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! என்னும் ஆசீரால் அவர்களையும் இத் தீய வாழ்க்கையிலிருந்து மீட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஏழ்மையில் வாடுவோருக்கு இரக்கம் காட்டப்படவும், இறை இரக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம்.

எளியோரின் அருட்சுனையே - வறியோரின் பெருந்துணையே - எம் இறைவா! ‘ஏழைகளே! நீங்கள் பேறு பெற்றோர்” - என்கிறார் திருக்குமாரன் இயேசு. ‘எளியோரின் புலம்பலையும், வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இறைவன் எழுந்து வருகிறார்” என்கிறது திருப்பாடல். இல்லாதார்க்கு நாங்கள் இரக்கம் காட்டவும், உமது இரக்கத்தை அதன் கைம்மாறாக நாங்கள் பெற்று மகிழவும் வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் உலகின் மேல் அன்பு கூர்ந்த தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் மனமாற்றம் பெற்று, நீர் எமக்குக்காட்டும் அன்பையும், பரிவையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்ந்திட அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா!

ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (லூக்கா 20:38)

கடவுள் பற்றி இயேசு போதித்த வேளைகளில் எல்லாம் மனிதருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு பற்றி விளக்கம் தந்தார். கடவுள் என்றால் மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, மனிதரோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் வாழ்கின்ற ஒரு ''பொருள்'' அல்ல; கடவுள் மனிதரை அன்புசெய்கின்ற தந்தையாக, தாயாக இருக்கின்றார். மனிதருக்கு வாழ்வு அளிப்பதே கடவுளின் நோக்கமேயன்றி அவர்களுக்கு அழிவைக் கொணர்வதல்ல அவரது திட்டம். மனிதருக்கு வாழ்வு தருகின்ற கடவுள் எக்காலத்திலும் உயிர் வாழ்கின்ற கடவுள். எனவே, எத்தலைமுறையைச் சார்ந்த மனிதரும் கடவுளில் வாழ்கின்றனர் எனலாம். சாவு நம்மைக் கடவுளிடமிருந்து பிரிப்பதில்லை; மாறாக, நம்மைக் கடவுளோடு புதிய விதத்தில் இணைக்கிறது. சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்னும் உண்மையை இயேசு உணர்த்தியபோது அதை வெறும் கருத்தளவிலான சிந்தனையாக மட்டுமே வழங்கவில்லை; மாறாக, அவரே தம் சாவுக்குப் பின் உயிர்பெற்றெழுந்தார்; கடவுளோடு எந்நாளும் மகிமையில் புகுந்துவிட்டார். இவ்வாறு நாமும் கடவுளோடு என்றும் இணைந்து வாழவே அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகத்தில் நிலவுகின்ற உறவுகள் அதே பாணியில் மறுவுலகிலும் இருக்கும் என்பது சரியான கருத்தல்ல எனவும் இயேசு காட்டுகிறார். திருமண உறவும் குழந்தைப் பேறும் இவ்வுலகில் முக்கியமான மனித எதார்த்தங்கள். ஆனால் மறுவுலகில் மனிதர் அனைவரும் கடவுளின் அன்புறவில் புதியதொரு நிலையைப் பெறுவதால் அங்கே திருமணமும் பிள்ளைப் பேறும் இராது என இயேசு சுட்டிக்காட்டுகிறார். உயிர்த்தெழுதல் பற்றி ஒரு கேள்வியை எழுப்பி இயேசு தருகின்ற பதிலைக் கொண்டு அவரிடத்தில் குற்றம் காண முற்பட்ட சதுசேயரின் முகமூடியைக் கிழித்தெறிந்தார் இயேசு. மனித வாழ்வு இம்மண்ணகத்தோடு முடிந்துவிடுவதில்லை; அதே நேரத்தில் மறுவுலக வாழ்வு இம்மண்ணக வாழ்வின் வெறும் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு புதிய நிலையில் நம்மை உயர்த்திவிடும். உயிர்வாழ்கின்ற கடவுளோடு இணைந்து நாமும் உயிர்வாழ்வோம் என்பதும் சாவின்மீது இயேசு கொண்ட வெற்றியில் நமக்கும் பங்குண்டு என்பதும் நமக்கு ஆறுதல் தரும் செய்தியே.

மன்றாட்டு:

இறைவா, சாவின் வழி புது வாழ்வு பெற்ற இயேசுவை நாங்கள் எங்கள் வழிகாட்டியாகக் கொண்டு நிலைவாழ்வு பெற அருள்தாரும்.