யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் செவ்வாய்க்கிழமை
2019-11-05




முதல் வாசகம்

ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-1

சகோதரர் சகோதரிகளே, நாம் பலராய் இருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்கு உரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக்கொடுப்போர் கற்றுக்கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர் நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.
திருப்பாடல்கள் 131: 1. 2. 3

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24

அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், ``இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, `வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது' என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், `வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார். `நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர். `எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர். பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், `நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்' என்றார். பின்பு பணியாளர், `தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, `நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' '' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்!

இயேசுவின் இந்த உவமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், வியப்புதான் மேலிடும். காரணம், திருமண விருந்துக்கு வர மறுப்பது என்பது சற்று வியப்பான செய்திதான். அதிலும் ஒவ்வொருவரும் சொன்ன சாக்குபோக்குகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஆம், இயேசு சொன்ன உவமையின் நோக்கமும் அதுதான். இறைவன் தருகின்ற விருந்தில் பங்கு கொள்வதற்கு நாம் மிகவும் தயங்குகிறோம். அதுவே வியப்புக்குரியதுதான். அதிலும் அத்தயக்கத்துக்கான காரணங்களாக நாம் முன்வைக்கும் காரணங்கள் அதிலும் வியப்புக்குரியவை என்பதை நமக்கு விழிப்பூட்டவே இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கிறார்.

இறையாட்சியின் விருந்திற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த விருந்து நிறைவான, நிலையான, அழியாத விருந்து. அந்த விருந்தை நாம் திருப்பலியிலும், இறைமொழியிலும், இறை அனுபவங்களிலும் பெறுகிறோம். ஆனாலும், அந்த விருந்தின்மீது நாம் அதிக ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, அழிந்து போகின்ற உணவு, பொழுதுபோக்குகள், நிறைவற்ற உறவுகள்... இவற்றில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். அத்துடன், இறையாட்சியின் விருந்தில் கலந்துகொள்ளாததற்கு நாம் ஆயிரம் சாக்குபோக்குகளைச் சொல்கிறோம். நேரமில்லை, களைப்பாக இருக்கிறது, மனநிலை சரியில்லை... இன்ன பிற சாக்குகளை எளிதாகச் சொல்லிவிடுகிறோம். இயேசு சொன்ன உவமை நமக்குத்தான் என்பதை உணர்ந்து, சாக்குபோக்குகளைக் களைந்து ஆர்வத்துடன் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்வோம்.

மன்றாட்டு:

விருந்தின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் தருகின்ற செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் என்பதை உணர்ந்து, நீர் தரும் அழைப்புக்காக நன்றி கூறுகிறோம். இந்த அழைப்பை முழு மனதுடன் ஏற்று, உமது விருந்தில் தகுதியுடன் பங்குபெற எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.