யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-10-06

(இன்றைய வாசகங்கள்: அபக்கூக்கு 1:2-3,2:2-4,திருப்பாடல்கள் 95: 1-2. 6-7. 8-9 ,திருத்தூதர் பவுல் திமொத்தேயு எழுதிய 2 திருமுகத்திலிருந்து வாசகம் ,புனித எழுதியலூக்கா நற்செய்தியிலிருந்து வாசகம் 17:5-10)




நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

வாருங்கள்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்: புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம்பிக்கை தான் வாழக்கை! இறைஇயேசுவின் மீதுள்ள நம்பிக்கை தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை. இந்த நம்பிக்கை-விசுவாசம் இவற்றைப் பற்றியே இன்றைய வாசங்கள் அமைந்துள்ளன. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, துணிவுடன் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம். கடவுள் மீதும், நம் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை நமது வாழ்வாக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
அபக்கூக்கு 1:2-3,2:2-4

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்க நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?. நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன.ஆண்டவர் எனக்கு அளித்த மறமொழி இதுவே: "காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
திருப்பாடல்கள் 95: 1-2. 6-7. 8-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை
திருத்தூதர் பவுல் திமொத்தேயு எழுதிய 2 திருமுகத்திலிருந்து வாசகம்

அன்பிற்குரியவரே,உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைகேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித எழுதியலூக்கா நற்செய்தியிலிருந்து வாசகம் 17:5-10

அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது; "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். "உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், "நீர் உடனே வந்து உணவருந்த அமரும்" என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, "எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்" என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள். "

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இரக்கம் நிறைந்த இறைவா,

எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும் அனைத்து திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள், துறவியர் ஆகிய அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்க பணி புரியவும், உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் தந்தையே!

ஏக்கத்தோடும், நம்பிக்கையற்ற நிலையிலும் ஆண்டவராகிய உம்மை நோக்கிக் கூக்குரலிடும் அனைவருடைய வேண்டுதல்களுக்கும் இரங்கி, அவர்கள் அனைவரும் சோர்வடையாது, நிலைகுலையாது, நம்பிக்கையோடு உமது வாக்குறுதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்து, உமது விருப்பப்படி வாழும் வரத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பொறுமை நிறைந்த இறைவா,

பசியையும் நோயையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு துன்பத்தில் வாழும் மனிதர்கள் மீது கருணை காட்டி, அவர்களுக்குத் தேவையான உணவையும், உடல்நலத்தையும் வழங்கி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மூவொரு இறைவனே எம் இறைவா!

எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும், தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எம் இறைவா!

எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச் செவிசாய்ப்பவரே, எம் இறைவா!

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நன்றியும்; கடமையும் !

மனித மனம் பாராட்டுக்காக ஏங்குகிறது. நன்றியை எதிர்பார்க்கிறது. ஆனால், இயேசுவின் சீடர்களின் மனநிலைக்கு மிகப்பெரிய வெல்விளியாக அமைந்திருக்கிறது இன்றைய வாசகம். நாம் அனைவருமே நமது கடமைகளை நேர்மையாக, நேர்த்தியாக ஆற்றிவிட்டு, நன்றியையோ, பாராட்டையோ எதிர்பார்க்க வேண்டாம் என்கிறார் ஆண்டவர் இயேசு. பணியில் நிறைவு (துழடி ளுயவளைகயஉவழைn) என்பது நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. பணியில் நிறைவு கிட்டாதபோது, அது விரக்திக்கும், மன உளைச்சலுக்கும் இட்டுச்செல்கிறது. பணி நிறைவையும், பாராட்டையும் நாம் இணைத்துப் பார்ப்பதால்தான் பல நேரங்களில் நமக்கு ஏமாற்றமும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன. பாராட்டையே எதிர்பாராமல், கடமையுணர்வுடன் மட்டுமே பணியாற்றினால், எந்த ஏமாற்றமும், மன அழுத்தமும் வராதே. நமது பணிக்கு நாம் எதிர்பார்க்கும் நியாயமான பாராட்டு என்பது நமது மனச்சான்று நமக்கு அளிக்கும் நற்சான்று ஒன்றுதான். அதாவது, இந்தப் பணியை நான் நேர்த்தியாக செய்துவிட்டேன் எனக்கு நமக்குள்ளே எழுகின்ற நிறைவு உணர்வு ஒன்றே நமக்குப் போதும் என்னும் மனநிலையை உருவாக்கிக் கொள்வோம். பணிகளை ஆர்வத்துடன் செய்வோம்.

மன்றாட்டு:

கடமையில் தவறாத ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் கடமைகளை, பணிகளை நாங்கள் நேர்மையுடன் ஆற்றவும், அந்தப் பணிகளுக்காக எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்காத நல்ல மனநிலையையும் எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் என்ன செய்தாலும், உமது மாட்சிமைக்காக மட்டுமே என்று கடமை செய்ய அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.