யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-09-15

தூய கன்னிதரியாளின் துயரங்கள்

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:7-11,13-14,திருப்பாடல்கள் 51: 1-2. 10-11. 15,17,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-17,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32)




நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு, மன்னிப்பையும் பெற அன்புடன் வரவேற்கின்றோம்.

ஆண்டவருக்குரியவர்களே, ஆண்டவரின் அன்பையும் பரிவையும் உணர்ந்தவர்களாய் பாவத்தில் இருந்து மனமாற்றம் அடைய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் மனம் திரும்பும்போது, காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்த ஆயனாக ஆண்டவர் மகிழ்ச்சி அடைகிறார். தொலைத்த பணத்தைக் கண்டுபிடிப்ப வரைப் போன்று, விண்ணுலகத் தூதரிடையே மகிழ்ச்சி ஏற்படும் என ஆண்டவர் எடுத்துரைக்கிறார். விண்ணகத் தந்தையின் அன்பை உணராதவர்களாய் அவரை விட்டு விலகிச் சென்ற தருணங்களுக்காக நாம் மன்னிப்பு வேண்டுவோம். மனமாற்றத்துடன் ஆண்டவரிடம் திரும்பிவர அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:7-11,13-14

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்னெ ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்'' என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், ``இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார். அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, ``ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
திருப்பாடல்கள் 51: 1-2. 10-11. 15,17

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி

இரண்டாம் வாசகம்

பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-17

அன்பிற்குரியவரே, எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது. `பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார். அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; .'' மேலும் இயேசு கூறியது: ``ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்மைகளின் ஊற்றாம் இறைவா,

திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும், மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய், இந்த இறைஇரக்கத்தின் ஆண்டில் அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும், அன்பையையும் பெற்றுச் சாட்சிய வாழவு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்னிப்பையும், இரக்கத்தையும் தாராளமாகப் பொழியும் அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்கள்மீது காட்டும் பேரன்பை பிறர்மீதும் பொழியும்போது, நாங்கள் அகமகிழவும், உம்மைப் பெருமைப்படுத்தவும் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும். எங்களுடைய மனநிலையை மாற்றி, தந்தையின் பரிவின் மனநிலையையும், மகனின் ஒப்புரவின் மனநிலையைத் தாரும். பிறரைத் தீர்ப்பிடாமல் வாழும் வரத்தைத் தந்தருள உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் சிகரமே எம் இறைவா!

ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணை நிறைந்த இறைவா!

புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும், நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் தொண்டவர்களாய் பணிவிடை செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதி அருள்பவரே இறைவா,

உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எம் இறைவா!

எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றி தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ''மகிழ்ச்சியடைகின்றார்'' (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.