யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் செவ்வாய்க்கிழமை
2019-08-27

புனித மொனிக்கா




முதல் வாசகம்

நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார்
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்2;1-8

1 சகோதர சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும். 2 உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். 3 எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல. 4 நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம். 5 நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. இதற்குக் கடவுளே சாட்சி. 6 கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. 7 மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். 8 இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்
திருப்பாடல்கள் 139;1,3,4,6

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!பல்லவி

3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.பல்லவி

4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.பல்லவி

6 என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது ப>ல்லவி.


நற்செய்திக்கு முன் வசனம்

6 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23;23-26

' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.24 குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.25 ' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.26 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' (லூக்கா 13:23)

சில வேளைகளில் மனிதர் எழுப்புகின்ற கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றலாம். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கும்போது அங்கே புதைந்துகிடக்கின்ற அர்த்தத்தை நாம் காண முடியும். ''மீட்புப்பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' என்னும் கேள்வி இவ்வகையைச் சார்ந்தது எனலாம். இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்குதான் அவர் சிலுவையில் அறையுண்டு மனித இனத்தின் மீட்புக்காகத் தம்மையே பலியாக்குவார். பயணம் செல்கின்ற இயேசுவை அணுகுகிறார் ஒருவர். மீட்புப் பெறுவோர் சிலரா பலரா என்பதை அவர் அறிய விரும்புகிறார். இயேசு அவருக்கு நேரடியான பதில் வழங்கவில்லை. ஆனால், இறையாட்சியில் நுழைவதற்கான வாயில் ''இடுக்கமானது'' என இயேசு குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், இயேசுவோடு பழகி, அவரோடு விருந்து அருந்தி உறவுகொண்டாடியதைக் காட்டி விண்ணரசில் நுழைந்துவிடலாம் என நினைத்தால் அது தவறு எனவும் இயேசு சொல்கிறார். என்றாலும், கடவுளின் ஆட்சியில் அனைத்து மனிதரும் இடம் பெற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதில் ஐயமில்லை.

தாங்களே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்னும் இறுமாப்பில் தங்களுக்கு எப்படியும் கடவுளின்; ஆட்சியில் பங்கு உண்டு எனவும், தாங்கள் மீட்புப் பெறுவது உறுதி எனவும் மக்கள் நினைத்தலாகாது என்பதை இயேசு உணர்த்துகிறார். கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரித்தானது. எனவே, மீட்புப் பெறுவோர் உலகின் நான்கு திசைகளிலிருந்தும் வருவர்; இறையாட்சியில் பங்கேற்பர் (காண்க: லூக்கா 13:29). இவ்வாறு கடவுளின் மீட்பில் பங்கேற்போர் சிலரல்ல, பலரே என நாம் கூறலாம். என்றாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, ''இடுக்கமான'' வாயில் வழியாக நுழைய வேண்டும் என்னும் போதனையை நாம் மறந்துவிடல் ஆகாது. மீட்பு என்பது நாம் கேட்டுப் பெறுகின்ற ஓர் உரிமை அல்ல, மாறாகக் கடவுள் தாமாகவே விரும்பி நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. எனவே, மீட்பு என்னும் கொடைக்காக நாம் எந்நாளும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதே முறை.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு மீட்பு என்னும் கொடையை அளித்ததற்கு நன்றி!