யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2019-08-25

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21,திருப்பாடல்கள் 117;1 2,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30)
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள். ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் வார திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இன்றைய திருப்பலி வழிபாடு நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவனுக்கு ஏற்றவராயிருக்க அன்புடன் அழைப்பு விடுக்கிறது. பல்வேறு நிலைகளில் பணிகள், களைப்பு, சோர்வு, பின்னடைவுகள், நோய்கள், வருத்தங்கள், இழப்புகள் மத்தியில் வாழும் மாந்தர் எந்த நிலையில் இருந்தாலும் அத்தனைக்கும் மத்தியில் இறைவனை நாடி நிற்பவர்களாயிருந்தால் அவர்கள் ‘அவர்’ க்கு ஏற்றவர்களாவே இருப்பர். இறையன்பால் நிறைந்திருந்து அவர் வழி செல்ல துன்பங்களால் நநைந்துகொண்டருந்தாலும் தளர்வுறா மனம் கொண்ட மக்களாயிருக்க புதிய ஆற்றலைத்தரும் இயேசுவோடு இணையச் செய்யும் திருப்பலியில் பலியாகிட முன்வருவோம்.முதல் வாசகம்

அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21

ஆண்டவர் கூறியது: மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள். அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்
திருப்பாடல்கள் 117;1 2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி

இரண்டாம் வாசகம்

`பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13

சகோதரர் சகோதரிகளே, தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: ``பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'' திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, ``தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ``ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ``இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், `நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நிறைவு அளிப்பவரே இறைவா,

உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வை இறைவாக்கினர் எரேமியாவைப் போல, சான்றுப் பகர்ந்து வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் சிகரமே எம் இறைவா!

ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியின் நாயகனே எம் இறைவா!

நீர் கண்டித்துத் திருந்தும் மனிதர் பேறுபெற்றவர் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் மாண்புள்ளவர்களாக வாழ்ந்து, நீர் கண்டித்தும் திருத்தும்போது, அதை ஏற்றுக் கொண்டு தளர்ந்து போகாமல் வாழ்ந்திட வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதி அருள்பவரே இறைவா,

உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே!

ஏழைகளுக்கும் நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்று அருள் தரும் விவிலிய வார்த்தைக்கு ஏற்ப எம் நாட்டில் நிலவும், பஞ்சம், ஏழ்மை, வறுமை, பசி, பட்னி வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, வியாபர மயமாக்குதல் போன்றவைகளை நீர் கண்ணோக்கி ஏழைகளின் வாழ்வு வளம்பெறத் தேவைகளை உணர்ந்துச் சந்தித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' (லூக்கா 13:23)

சில வேளைகளில் மனிதர் எழுப்புகின்ற கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றலாம். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கும்போது அங்கே புதைந்துகிடக்கின்ற அர்த்தத்தை நாம் காண முடியும். ''மீட்புப்பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' என்னும் கேள்வி இவ்வகையைச் சார்ந்தது எனலாம். இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்குதான் அவர் சிலுவையில் அறையுண்டு மனித இனத்தின் மீட்புக்காகத் தம்மையே பலியாக்குவார். பயணம் செல்கின்ற இயேசுவை அணுகுகிறார் ஒருவர். மீட்புப் பெறுவோர் சிலரா பலரா என்பதை அவர் அறிய விரும்புகிறார். இயேசு அவருக்கு நேரடியான பதில் வழங்கவில்லை. ஆனால், இறையாட்சியில் நுழைவதற்கான வாயில் ''இடுக்கமானது'' என இயேசு குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், இயேசுவோடு பழகி, அவரோடு விருந்து அருந்தி உறவுகொண்டாடியதைக் காட்டி விண்ணரசில் நுழைந்துவிடலாம் என நினைத்தால் அது தவறு எனவும் இயேசு சொல்கிறார். என்றாலும், கடவுளின் ஆட்சியில் அனைத்து மனிதரும் இடம் பெற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதில் ஐயமில்லை.

தாங்களே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்னும் இறுமாப்பில் தங்களுக்கு எப்படியும் கடவுளின்; ஆட்சியில் பங்கு உண்டு எனவும், தாங்கள் மீட்புப் பெறுவது உறுதி எனவும் மக்கள் நினைத்தலாகாது என்பதை இயேசு உணர்த்துகிறார். கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரித்தானது. எனவே, மீட்புப் பெறுவோர் உலகின் நான்கு திசைகளிலிருந்தும் வருவர்; இறையாட்சியில் பங்கேற்பர் (காண்க: லூக்கா 13:29). இவ்வாறு கடவுளின் மீட்பில் பங்கேற்போர் சிலரல்ல, பலரே என நாம் கூறலாம். என்றாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, ''இடுக்கமான'' வாயில் வழியாக நுழைய வேண்டும் என்னும் போதனையை நாம் மறந்துவிடல் ஆகாது. மீட்பு என்பது நாம் கேட்டுப் பெறுகின்ற ஓர் உரிமை அல்ல, மாறாகக் கடவுள் தாமாகவே விரும்பி நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. எனவே, மீட்பு என்னும் கொடைக்காக நாம் எந்நாளும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதே முறை.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு மீட்பு என்னும் கொடையை அளித்ததற்கு நன்றி!