யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வெள்ளிக்கிழமை
2019-08-09




முதல் வாசகம்

நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா?
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 4;32-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? `ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப் பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார். `மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;
திருப்பாடல்கள் 77;12-16 21

11 ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன். 12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். -பல்லவி

13 கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! 14 அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. -பல்லவி

15 யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக்கொண்டீர். 20 மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;24-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசுவின் உருமாற்றம் !

இன்று நாம் இயேசுவின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு. எதற்காக இயேசு தோற்றம் மாறினார்? இந்த நிகழ்வின் தாக்கம் என்ன? என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

1. இயேசு உண்மையிலேயே இறைமகன், தந்தை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதை இந்த நிகழ்வு எண்பிக்கிறது. எனவே, அவரது சீடர்களின் நம்பிக்கை ஆழப்படுவதற்காக இந்த உருமாற்றம் நிகழ்ந்தது.

2. இத்தனை மாட்சிமை நிறைந்த இறைமகனாம் இயேசு தந்தையின் விருப்பப்படி சிலுவைச் சாவை ஏற்க வேண்டும் என்பதை சீடர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பட்டது.

3. மாட்சியும், துன்பமும், பாராட்டும்-அவமானமும் மானிட வாழ்வு என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதையும் இது எடுத்துச்சொல்கிறது.

மன்றாட்டு:

தெய்வீக மாட்சி மிக்க ஆண்டவர் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது மாட்சியை நீர் விட்டுவிடாமல், உம்மையே தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டீரே, உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள ஆற்றல் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.