யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






பொதுக்காலம் 15வது வாரம் திங்கள்கிழமை
2019-07-22

புனித மகதலாமரியா




முதல் வாசகம்

என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.
இனிமை மிகுபாடல் 3;1-4

1 இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! 2 "எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்" தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்! 3 ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். "என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன். 4 அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்; விடவே இல்லை; என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்; என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றே
திருப்பாடல்கள் 63;1-5,7-8

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது..பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.பல்லவி

3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.பல்லவி

5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.பல்லவி

8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

"என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20;1,11-18

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். 12 அங்கே வெண்ணாடை அணிந்த இருவானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். 13 அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லை" என்றார். 14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. 15 இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார். 16 இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு "போதகரே" என்பது பொருள். 17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். 18 மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"மகதலா மரியா சீடரிடம் சென்று, 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்றார்" (யோவான் 20;18)

மகதலா மரியாவுக்குத் "திருத்தூதருக்குத் திருத்தூதர்" என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. யோவான் நற்செய்திப்படி, மகதலா மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு வாரத்தின் முதல்நாள் விடியற்காலையே வந்து, உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்தார். புத்துயிர் பெற்று எழுந்த இயேசுவைச் சந்தித்த முதல் சீடர் மகதலா மரியா. ஆனால் அவர் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இயேசு அவரைப் பார்த்து, "மரியா" என்று பெயர்சொல்லிக் கூப்பிட்ட வேளையில்தான் மரியா தம் முன்னிலையில் நின்றவர் இயேசுவே என அடையாளம் கண்டார். உடனே இயேசுவை நோக்கிப் "போதகரே" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கிறார். அதன்பின்னர் இயேசு மரியாவுக்கு ஒரு சிறப்புப் பணி கொடுக்கிறார். அதாவது மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார் என்னும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். மரியாவும் சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார். இங்கு மரியா இயேசுவை "ஆண்டவர்" எனக் குறிப்பிடுவது கருதத் தக்கது. இயேசு ஒரு போதகர் மட்டுமல்ல, கடவுளின் இயல்பில் பங்குபெறுகின்ற "ஆண்டவர்".

உயிர்பெற்றெழுந்த இயேசு நம்மோடு உயிர்வாழ்கின்றார். அவரை நாம் அடையாளம் காண வேண்டும் என்றால் நாமும் ஒரு நம்பிக்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இயேசுவை நாமும் சந்திக்க வேண்டும். இயேசு நம்மைப் பெயர்சொல்லி அழைப்பதை நாம் கேட்க வேண்டும். நாம் பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு அவர்களையும் இயேசுவில் நம்பிக்கை கொள்ள இட்டுச் செல்ல வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் இயேசுவை நாங்கள் ஆண்டவராக ஏற்று அவருக்குச் சான்று பகர எங்களைத் திடப்படுத்தியரும்.