யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-07-07

(இன்றைய வாசகங்கள்: எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 66;10-14,திருப்பாடல்கள் 66;1-7 ,திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6;14-18,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10;1-12,17-20)




நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.

இன்று பொதுக்காலம் பதின்நான்காம் ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும் இத்தினத்தில் நாம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம். இன்றைய நாளில் மீண்டும் புதிய ஆசீர்வாதத்திற்குள் நம்மை அழைத்தச் செல்கிறார் இறைவன். உறுதியின் உறைவிடமான இறைவன், உன்னதமான வாழ்வை நமக்குத் தருவதாக வாக்களிக்கின்றார். ஆறுதல், நிறைவு, செல்வம், இன்பம் அனைத்தையும் பாய்ந்தோடும் ஆறுபோலவும், பெருக்கெடுத்த நீரோடைபோலவும் அவரே அருளுகின்றார். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் அவர் நம்மையெல்லாம் தேற்றுகின்றார்: ஆகவே நாம் அனைவரும் ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம், அமைதியின் வாழ்த்தை இதயத்தில் சுமந்து சென்று உறவுகளை உறுதிப்படுத்துவோம், இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். நாம் ஆண்டவருக்காக பணியாற்றும் அமைதியின் தூதர்களாக இந்த உலகில் செயல்பட இறைவன் அழைக்கிறார். நம் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 66;10-14

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன். நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
திருப்பாடல்கள் 66;1-7

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3 கடவுளை நோக்கி `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். பல்லவி

5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி!தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி

இரண்டாம் வாசகம்

என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6;14-18

சகோதரர் சகோதரிகளே, நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10;1-12,17-20

அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.” பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர். அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணியாற்ற அனுப்புபவராம் இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் நம்பிக்கையால் நீர் அளிக்கும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும், திருச்சபையின் மக்கள் அனைவரும் வாழ்வுபெறச் செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பே உருவான ஆண்டவரே,

எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட ஆணையிட்டுள்ளீர். உம்மைப் போற்றுகிறோம். ஓநாய்கள்போல் எங்களைக் காயப்படுத்தக் காத்திருக்கும் உலகின் தீமைகள் அனைத்தினின்றும் எங்களைக் காத்தருள்வீராக. என்னுடைய பணிகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் ஆற்ற எனக்கு வரம் தாரும். பணியிடங்களில் தேவையின்றி பேச்சை வளர்க்கும் பழக்கத்தை மாற்ற உமது தூய ஆவியின் அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா,

உலகெங்கும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாக மாற்றி உலகிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இயற்கையைப் படைத்து இவை அனைத்தையும் உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள் என்ற எம் இறைவா!

இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்தத் தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை மழையாகப் பொழிந்த எம் தாகம் தீர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாம் வல்ல இறைவா!

நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மூவொரு இறைவா,

எங்கள் பங்கு சமூகத்தில் ஒன்றித்து வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அன்பிலும் ஒற்றுமையிலும் வளரவும், உமக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா!

தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' (லூக்கா 10:20)

மனிதராகிய நம் வழியாக, நமது ஒத்துழைப்போடு வியத்தகு காரியங்களைச் சாதிக்க விரும்புகிறார் கடவுள். ஆனால் கடவுளின் பணியை ஆற்றுகின்ற வேளையில் நாம் தவிர்க்க வேண்டிய சோதனை ஒன்று உண்டு. அதாவது. கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பணியைச் செய்யும்போது அது வெற்றியாக அமைந்துவிடும் வேளைகளில் ஏதோ நம்முடைய திறமையால் அந்த வெற்றி கிடைத்ததுபோல நாம் நினைத்துவிடக் கூடாது. கடவுள் நமக்குத் தந்த பணியை நன்முறையில் நாம் ஆற்றிவிட்டால் அந்த வெற்றிக்குக் காரணம் கடவுளே என உணரவேண்டும். மேலும், கடவுளின் பணியை ஆற்றும்போது தோல்விகள் கூட ஏற்படுவது இயல்பு. அந்த நேரங்களில் நாம் நம்பிக்கை இழந்துவிடுதலும் சரியல்ல.

கடவுளையும் அவரது ஆட்சியை அறிவிக்கின்ற இயேசுவையும் நம்புவோர் தாழ்ச்சி நிறைந்த மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும். கடவுள் எல்லையற்ற இரக்கமும் பரிவும் கொண்டவர் என்பதை நாம் உணர்ந்து, மகிழ்ந்து, நன்றிகூற வேண்டும். ஏனென்றால் தகுதியற்ற கருவிகளாக நாம் இருந்தபோதிலும் கடவுள் நம் வழியாகத் தம் திட்டங்களை நிறைவேற்றுகிறார். இது கடவுளின் இரக்கப் பெருக்கின் வெளிப்பாடுதான். கடவுளிடமிருந்தே நாம் அனைத்தையும் பெறுகிறோம். கடவுளுக்கே நாம் முற்றிலும் உரித்தானவர்கள். கடவுளிடமிருந்து பெறுவதைத் தவிர நமக்கென்று நாமே ஈட்டிக்கொண்டது ஒன்றுமே இல்லை. இம்மன நிலை நம்மிடம் இருந்தால் நாம் கடவுளின் பணியை ஆற்றும்போது ஏற்படுகின்ற வெற்றியைக் கண்டு செருக்குறாமல் இருப்போம்; தோல்வியின்போது மனம் தளர்ந்து சோர்ந்துபோகவும் மாட்டோம். பரிவோடு நம்மைத் தேடி வந்து அரவணைக்கின்ற அன்புக் கடவுளின் அருளை வியந்து நாம் எந்நாளும் மகிழ்ச்சியடைவோம் (லூக் 10:20)

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பையும் அமைதியையும் உலகிற்குக் கொணர்கின்ற கருவிகளாக நாங்கள் செயல்பட அருள்தாரும்.