யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2019-06-30

(இன்றைய வாசகங்கள்: 1அரசர்கள் ஆகமத்திலிருந்து வாசகம் 19;16,19-21,பதிலுரைப்பாடல் திபா: 16: 1-2, 5,7-11 ,தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்5;1,13-18,புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9;51-62)
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

அனைவருக்கும் வணக்கம்

ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வார ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் ஒன்றிணையும் இறைமக்கள் அனைவருக்கும் என் எளிய அன்பு வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறேன். ஊர்களில் கிராமங்களில் அந்தந்த ஊர்களுக்கு ஏற்றாற்போல சில ஊர் நிபந்தனைகள் அங்குள்ள மக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். இன்றைய திருப்பலி வழிபாட்டு வாசகங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது இத்தகைய கட்டுக்கள் (நிபந்தனைகள்) இறைவன் விரும்பும் பணிகளுக்கு இல்லை என்று அறியவருகிறோம். தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் பணிக்கென அடியவர்களை தேர்ந்து எடுத்து தன் சொந்த மக்களாக்கி, அரச குல குருக்களாக்கினார். தூய மக்களினமாக அனைவருக்கும் முன்னிருத்துகிறார். ஆகவே இத்திருப்பலி வழியாக நாம் அனைவரும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழும் வரம் கேட்போம், இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.முதல் வாசகம்

"நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் " என்றார்
1அரசர்கள் ஆகமத்திலிருந்து வாசகம் 19;16,19-21

ஆண்டவர் கூறியது: நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் " என்றார். அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்! " என்றார்.எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து:
பதிலுரைப்பாடல் திபா: 16: 1-2, 5,7-11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.பல்லவி

2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே பல்லவி ;

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்பல்லவி .

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!எனவே நான் சொல்கிறேன்
தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்5;1,13-18

சகோதர சகோதரிகளே,.கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக " என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை.நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9;51-62

அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? " என்று கேட்டார்கள்.அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் " என்றார்.இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை " என்றார்.இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றிவாரும் " என்றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் " என்றார்.இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் " என்றார்.வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்: ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் " என்றார்.இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நம்பிக்கை தருபவராம் இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் நம்பிக்கையால் நீர் அளிக்கும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும், திருச்சபையின் மக்கள் அனைவரும் வாழ்வுபெறச் செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் மாறாத பேரன்பு உடையவரான தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் கிறீஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைத்தலை ஆழமாக உணர்ந்து திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைக்கவும்: தூயஆவியின் தூண்டுதலுக்கு ஏற்பவாழவும், தீமைகளை எம் வாழ்விலிருந்து அகற்றி நாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகிலிருந்து தவறுகள் அகலவும், நோய்கள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைப்பட்டோர் விடுதலை பெறவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக நாடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இயற்கையைப் படைத்து இவை அனைத்தையும் உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள் என்ற எம் இறைவா!

இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்தத் தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை மழையாகப் பொழிந்த எம் தாகம் தீர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாம் வல்ல இறைவா!

நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மூவொரு இறைவா,

எங்கள் பங்கு சமூகத்தில் ஒன்றித்து வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அன்பிலும் ஒற்றுமையிலும் வளரவும், உமக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா!

தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவைப் பின்பற்ற

இயேசுவின் சீடத்துவத்தைப் பற்றிச் சிந்திக்க அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு தன் சீடர்களுக்கு விடுக்கும் அழைப்பு நிபந்தனைகள் நிறைந்தது. அனைத்தையும் துறந்து தன்னைப் பின்செல்ல வேண்டும் என்ற அழைப்பை ஏற்றுத்தான், அவரது முதல் சீடர்கள் படகுகளையும், வலைகளையும் விட்டுவிட்டுச் சென்றனர். இப்போதோ, இன்னும் சில சீடர்கள் முன் வருகின்றனர். ஆனால், இயேசு அவர்களுக்குத் தம் நிபந்தனைகளை எடுத்துரைக்கிறார்.

மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடம் இல்லை. எனவே, அவரது சீடர்களும் இடம், பொருள், மனிதர்கள்மீது பற்று கொண்டிருக்கக் கூடாது. எங்கும், எப்போதும் செல்ல அணியமான மனநிலை கொண்டிருக்க வேண்டும். எளிய வாழ்வு வாழ வேண்டும்.

தமது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் பற்றி அதிகக் கவலை கூடாது. அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வார். சீடரின் கடன் தலைவரைப் பின்பற்றுவதே.

தனது அழைத்தலை விட்டுவிட்டுக் கடந்த கால வாழ்வுக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. எதிர்காலம் பற்றிய கவலையோ, கடந்த காலம் பற்றிய ஏக்கமோ கூடாது. நிகழ்காலத்தில் இயேசுவோடு வாழ வேண்டும்.

நமது அழைப்பு என்ன? நமது தடுமாற்றங்கள் எதில் இருக்கின்றன என்று ஆய்வு செய்து, நிபந்தனையற்ற விதத்தில் இயேசுவைப் பின்பற்றுவோமாக!

மன்றாட்டு:

காலத்தை வென்ற காவிய நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்களாக எம்மையும் அழைத்திருக்கிறீரே, உமக்கு நன்றி. எந்தவிதமான சாக்குபோக்குகளும் கொடுக்காமல், உம்மையே பற்றிக்கொண்டு, உம்மைப் பின் தொடரும் வரத்தை எமக்கு அருள்வீராக. இறைவா, உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.