யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் புதன்கிழமை
2019-06-26




முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12,17-18

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: ``ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.'' அப்பொழுது ஆபிராம், ``என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்'' என்றார். அதற்கு மறுமொழியாக, ``இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்'' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, ``வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆண்டவர் ஆபிராமிடம், ``இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே'' என்றார். அதற்கு ஆபிராம், ``என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?'' என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், ``மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா'' என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, ``எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். பல்லவி

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார் பல்லவி.

9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இவையே நிஐம்

மனித வாழ்க்கை நன்றாக இருக்க போலிகளை உருவாக்கக் கூடாது. போலிகளை இனம்கண்டு அவைகளை அழிக்க வேண்டும். போலிகளை உருவாக்குவதும் மனிதன்தான். அதை அழிக்க முடியாமல் பல இழப்புக்ளைச் சந்திப்பதும் அதே மனிதன்தான்.பொருட்களில் உள்ள போலிகள் கூட, மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி, மனிதனைப் பல சிரமங்களுக்குள்ளாக்கிவிடுகிறது. கள்ள நோட்டுகள் பொருளாதரத்தைத் சிதைத்துவிடுகிறது. போலி மருத்துவர், மனிதனின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். இதுவே போலி இறைவாக்கினர் என்றால்,பொருளும் உயிரும் ஆன்மாவும் பாதிப்புக்குள்ளாகிவிடுகிறது. இவ்வுலக வாழ்வும் மறுவுலக வாழ்வும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, போலி இறை வாக்கினர்கள் மனிதர்களுக்குப் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் மட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என இயேசு எச்சரிப்பது சரியானதே.

உண்மை இறைவாக்கினர்கள், சமுதாயத்தின் பொய்த் திறைகளுடன் சமரசம் பேசாத நெருப்புச் சுவாலைகள். சமுதாயத்தின் அரசியல் குழப்பங்களிலும் ஒழுக்கச் சரிவுகளிலும் தனித்து ஒலிக்கும் ஒலிவாங்கிகள். கடவுளின் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் இறைவனின் குரல் நாண்கள். பாசப்பிணைப்புகளால், ஆசை அலைகளால் அசைக்கமுடியாத வச்சிரத் தூண்கள். ஆழமான ஆன்மீகத்தால், செப உறவால் இறைவனோடு இருக்கமாகக் கட்டப்பட்டவர்கள். அர்ப்பணத்திலும் கீழ்ப்படிதலிலும் தம்மை தகனப்பலியாக்கும் தியாகச் செம்மல்கள். தீமைகளை அஞ்சாது வேரறுக்கும் வீர வாள்கள். இக்கனிகளைக்கொண்டு உண்மை இறைவாக்கினர்களை அடையாளம் காண்போம்.அவர்களைப் பாராட்டுவோம்; அவர்கள் வழி நடப்போம் . இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தி அறிவிப்பதில் நாங்கள் உறுதியாகச் செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.