யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2019-05-19

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:21-27,திருப்பாடல்கள்145;8-13,திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 21:1-5,+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:31-35)
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. 
எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. 
எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.


திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்புக்குரியோரே,

திருமகன் உயித்தெழுந்த விழாக்காலத்தை திருப்பலி வழியாகக் ஒவ்வொரு நாளும் கொண்டாடி இயேசுவின் மீட்புச் செயலின் மேன்மையை அணு அணுவாக உணர்ந்து செறிவூட்டப்பெறும் நாம் இன்று உயிர்ப்புக் காலத்தின் 5 ஆம் வாரத்தை எட்டியிருக்கிறோம். கடவுளின் மீட்புச் செயலால் நம் பாவங்கள் அனைத்தும் கழுவப் பெற்று கடவுளின் பிள்ளைகள் எனும் நிலையை எட்டியிருக்கிறோம். கடவுளின் அன்புக்குரிய பிள்ளைகள் என்ற உயர் நிலையை அடைந்து மகிழ்ந்து நிற்கும் உங்கள் எல்லாரையும் அன்புடன் மகிழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறேன். இந்த மேன்மையான உயர் நிலையை நாம் எவ்வாறு அடைந்தோம், அடைகிறோம் என்று இன்றைய திருப்பலி வழிபாட்டு இறைமொழிகள் மிக அருமையாக நமக்கு உணர்த்துகின்றன. கிறிஸ்துவின் வாழ்வு கடவுளை மாட்சிப்படுத்தியது போல, நம் அன்பு வாழ்வின் வழியாக கடவுளை மாட்சிப்படுத்த நாம் அழைக்கப்பட்டுளோம். இயேசுவின் அழைப்புக்கு ஏற்ப அவரது சீடர்களாய் வாழ்ந்து, கடவுள் தரும் மாட்சியைப் பெற வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:21-27

21 மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்." 22 பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 23 பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், "திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். 24 எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. 25 எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். 26 இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27 எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்கள்145;8-13

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகம்


திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 21:1-5

1 பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. 2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. 3 பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" என்றது. 5 அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். மேலும், ""இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை" என எழுது" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:31-35

31 அவன் வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார். 33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். 35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வின் வழியாம் இறைவா,

திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டுபவர்களாய் திகழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் ஒளியாம் இறைவா,

உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங்களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அணைகடந்த உமது அன்பினால் எம்மை அரவணைக்கும் இறைவா!

இன்று உலகில் நடைபெறும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள், துறவற வாழ்வை மேற்கொண்டவர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள், மதத்தின் பெயரால் ஆங்காங்கே நடைபெறும் செயல்களை இனம் கண்டு, மனித வாழ்வின் மேன்மையை இவர்கள் உணரவும்,இஉம் ஆவியின் ஆற்றலை இவர்களும் உணர்ந்துச் சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

இலங்கை வாழும் கிறிஸ்தவர்கள் மீண்டும் புதுவாழ்வுப் பெற்று உமது அன்பிலும், அடைக்கலத்திலும் பாதுகாப்பான சமய வாழ்வும், இழப்புகளினால் ஏற்பட்ட சோகங்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் விட்டுபட்டு, தங்களின் வளமையான, அமைதியான வாழ்வுப் பெற்றிட வேண்டி உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வின் இலக்காம் இறைவா,

கிறிஸ்தவர்கள் செய்யும் சமூக நலப் பணிகளை தவறாக கண்ணோக்கும் இயக்கங்களின் வழிகாட்டுதலால் மனதில் நஞ்சு கலந்திருக்கும் இளைஞர்கள், நீரே வாழ்வின் உண்மை யான இலக்கு என்பதை உணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவருடைய கட்டளைகளை இதயத்தில் இருத்திக் கொள்பவர் நீட்டிய ஆயுளையும், நிலையான நலன்களையும் பெற்றுக் கொள்வார் என்ற மொழிந்த எம் இறைவா!

கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். நம்மீது அவர் மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அதே இரக்கத்தையும் அன்பையும் நாம் பிற மனிதர்களுக்கும் காட்ட எங்களுக்கு அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா,

இன்றைய சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாதுப் பயணம் செல்லத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

கடவுள் மாட்சி பெறட்டும் !

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நாம் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் இறைமொழி வழியாக அறிகின்றோம். இயேசு தமது இறுதி செபத்தில் இவ்வாறு செபித்தார்: #8220;மானிட மகன் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்”. நாம் நேர்மையோடும், அன்போடும் ஆற்றுகின்ற ஒவ்வொரு செயலிலும் இறைவன் மாட்சி அடைகின்றார். மனம் மகிழ்கின்றார்; என்பதே ஒரு நற்செய்தி அல்லவா! எனவே, நாம் எதைச் செய்தாலும், அச்செயல் வழியாக இறைவன் மாட்சி அடையவேண்டும் என்னும் மனநிலையில் பணியாற்ற வேண்டும். நமது ஒவ்வொரு அன்புச் செயலும் இறைவனை மனமகிழச் செய்கிறது என்பதை உணர்ந்தால், நமது செயல்களுக்குப் புதிய பரிமாணம் கிடைக்காதா? எனவே, நாம எதைச் செய்தாலும், கூலிக்காக செய்யாமல், ஆண்டவருக்காக செய்ய முன்வருவோமாக!

மன்றாட்டு:

உழைப்பை மேன்மைப்படுத்தி, தந்தையை மாட்சிப்படுத்திய இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். #8220;தந்தை எனக்குக் கொடுத்த வேலையை செய்துமுடிப்பதே என் உணவு” என்று மொழிந்து, உரைத்தவாறே தந்தையின் பணிகளை நன்றாகச் செய்து, தந்தையை மாட்சிப்படுத்தினீரே. உமக்கு நன்றி. உம்மைப் போல நாங்களும் உழைக்க, இறைவனை மாட்சிப்படுத்த அருள்தாருமு;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.