யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-04-28

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:12-16,திருப்பாடல்கள் 118:2-4, 22-27,திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 1:9-11, 12-13, 17-19,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31)




உங்களுக்கு அமைதி உரித்தாகுக! உங்களுக்கு அமைதி உரித்தாகுக!


திருப்பலி முன்னுரை

நம்பிக்கை கொண்டோரே,

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப் பிக்கும் இன்றைய நாளில், இறைமகன் இயேசு தம் திருத்தூதர்கள் வழியாக, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை திருச்சபைக்கு வழங்கிய நிகழ்வு இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகிறது. நாம் கடவுள் மீது எந்த அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், நமது ஐயங்களைப் போக்க கடவுள் இரக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். உயிர்த்த இயேசுவில் முழுமையான நம்பிக்கை வைக்கவும், மரணத்தை வென்ற அவருக்கு சான்று பகரவும் உறுதி ஏற்போம். இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என்னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம். இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:12-16

அந்நாட்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். 13 மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். 14 ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். 15 பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; 16 எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல்கள் 118:2-4, 22-27

2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27 ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

இரண்டாம் வாசகம்


திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 1:9-11, 12-13, 17-19

9 உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. 10 ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். 11 "நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை" என்று அக்குரல் கூறியது. 12 என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். 13 அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். 17 நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; "அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. 18 வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. 19 எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். 29 இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நம்பிக்கையின் நாயகரே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாற்றத்தை தருபவராம் இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சமாதானத்தின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் சமாதானம் ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!

பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

உயிர்த்த இயேசு தரும் சமாதானம்

யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தனர். சீடர்கள் தங்கியிருந்த அறை, இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையாக இருக்கலாம். அவர்கள் இருந்தது மேல் அறை. யூதர்களின் கோபம், வெறுப்பு முதலானவை சீடர்களுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவை ஒழித்தாயிற்று. இனி எப்படியும், அடுத்த இலக்கு தாங்கள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எந்தநேரமும் தலைமைச்சங்க காவலர்கள் வந்து தங்களை கைது செய்யலாம் என்று நினைத்தனர். எனவே, மேலறையிலிருந்து அவர்களுக்கு கேட்கும் ஒவ்வொரு சத்தமும், அவர்களின் இருதயத்தை கலங்கடித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார்.

உயிர்த்த இயேசு அவர்களுக்கு சொல்லும் செய்தி: உங்களுக்கு அமைதி உண்டாகுக!. கலங்கிப்போயிருந்த சீடர்களின் கலக்கத்தை இயேசு அறியாதவரல்ல. அவர்களின் வேதனையை இயேசு உணராதவர் அல்ல. அவருக்கு சாவின் பயம் நன்றாகத்தெரியும். ஏனென்றால், சாவை எதிர்நோக்கியிருந்த அவரே, கெத்சமெனி தோட்டத்தில், திகிலும் மனக்கலக்கமும் அடைந்திருந்தார். ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’ என்று அவரே சொல்லியிருக்கிறார். எனவே, சீடர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்ட இயேசு, அவர்களுக்கு அந்த நேரத்தில் எது தேவையோ, அதை அறிந்து வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். கலங்கிப்போயிருக்கிற சீடர்களுக்கு அப்போதைய தேவை அமைதி. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீடர்களின் பயஉணர்வுகள் அகன்று போனது. அவர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். உயிர்த்த இயேசு கலங்கிப்போயிருந்த சீடர்களுக்கு கலக்கத்தைப்போக்கி மகிழ்ச்சியைத் தருகிறார்.

வாழ்வில் கலக்கம் வரும்போது, உயிர்த்த இயேசு நமக்கு தரும் அமைதி மிகப்பெரிய பொக்கிஷம். நம்முடைய கவலைகளை, துயரங்களை அறிந்தவர், நம்மைக் கைவிடப்போவதில்லை. நம்முடைய கலக்கத்தைப்போக்கி நமக்கு மகிழ்ச்சியை, மனஅமைதியை தருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். அந்த அமைதியை, மகிழ்ச்சியைப்பெற்றுக்கொள்ள முனைவோம். உயிர்த்த ஆண்டவரில் நம் நம்பிக்கையை வைப்போம்.

மன்றாட்டு:

உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.