யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-04-07

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 43:16-21,பதிலுரைப்பாடல்: திபா: 126: 1-6,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:8-14,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8:1-11)




உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்! உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்!


திருப்பலி முன்னுரை

இயேசுவில் அன்புள்ளம் கொண்ட பெரியோர்களே, இளைஞர்களே, சிறுவர் சிறுமியரே தவக்கால 5 ஆம் வார வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். மன்னிப்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மாற்றத்துக்கு உரியவர்களே, இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, பழைய பாவ வாழ்வை விட்டுவிட்டு புதிய அருள் வாழ்வுக்கு கடந்து செல்ல நம்மை அழைக்கிறது. நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும், மனம் வருந்தி ஆண்டவரிடம் திரும்பும்போது, நம்மை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார். பிறரது குற்றங்களை அலசி ஆராயும் நாம், நமது பாவங்களை எண்ணிப் பார்க்க வேண்டுமென ஆண்டவர் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். எல்லோரும் நம்மை விட்டுச் சென்ற பிறகு, நாம் கடவுள் முன் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். இயேசுவைப் பின்பற்றி வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது பாவ வாழ்வை களைந்து விட்டு அவரிலே புதுவாழ்வு பெறும் வரம் வேண்டி, இத்திருப் பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

இதோ நாம் புதியன செய்கிறோம். நாம் மக்களின் தாகம் தீர்ப்போம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 43:16-21

கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே. முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்: முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்: இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்: பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்: குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்: ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்: பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்: அதனால் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்
பதிலுரைப்பாடல்: திபா: 126: 1-6

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது: பல்லவி

ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் ; என்று பிற இனத்தார் தங்களுக் குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்: அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்: அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின்; பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகின்றேன்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:8-14

சகோதர சகோதரிகளே, உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது: நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும். நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் ; ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: என்கிறார் ஆண்டவர். (யோவே 2:12-13) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8:1-11

அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறி'ஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 'போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்ற அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்து, 'அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார். அவர், 'இல்லை, ஐயா ' என்றார். இயேசு அவரிடம் 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

சீரமைத்து புதுப்பிப்பவராம் இறைவா,

எங்கள் திருத்தந்தையை நிறைவாக ஆசீர்வதித்து, அவர் வழியாக திருச்சபையின் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருடைய விசுவாச வாழ்வையும் சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாற்றத்தை தருபவராம் இறைவா,

உம்மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் உலக மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்கி, அவர்கள் உள்ளங்களில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஒளியை ஏற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமும் மன்னிப்பும் வழங்கும் இறைவா,

உமது பேரன்பால் எங்களைத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்றுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். உமது மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நாங்கள் இனி பாவம் செய்யாமல் வாழ அருள் புதிய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்னிப்பு அருள்பவராம் இறைவா,

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமை தவறியதாலும் செய்த பாவங்களால் உமது அன்புறவை இழந்து தவிக்கும் மக்களுக்கு, உமது இரக்கத்தால் மன்னிப்பு வழங்கி புதுவாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்னிப்பின் நாயகனே இறைவா,

உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம், பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா!

எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் மனமாற்றத்தை வாஞ்சையுடன் எதிர்பார்க்கும் இறைவா!

அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் பரந்த மனப்பான்மையும், உமது அன்பு, கருணை, மன்னிப்பு, அரவணைக்கும் பண்பு, மனமாற்றத்தில் மகிழ்ச்சி, பிறர் சுதந்திரத்தை மதித்தல் ஆகிய பண்புகளை எமதாக்கிக் கொள்ள அருள் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நானும் தீர்ப்பளிக்கவில்லை !

நேற்றைய சிந்தனையின் தொடர்ச்சியாக இன்றும் நாம் தீர்ப்பிடுவது பற்றிச் சிந்திக்கிறோம். நேற்று தீர்ப்பிடும் உரிமை மனிதருக்கு அல்ல, இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று பார்த்தோம். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு இறைவனின் இன்னொரு முகத்தை, பரிவின் பார்வையைக் காட்டுகிறார். நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம்” என்று விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு சொல்வதன் மூலம், இறைவனும் நம்மைத் தீர்ப்பிடாமல், மன்னிக்க முன்வருவதைக் காட்டுகிறார். இறைவனுக்கு இரண்டு பண்புகள் இருக்கின்றன: நீதி, அன்பு. இறை நீதியின்படி நாம் தண்டனைக்குரியவர்களாக இருந்தாலும், இறை இரக்கத்தின்படி நாம் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறோம். காரணம், நமது பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் இயேசு தாமே முன்வந்து, சுமந்துகொண்டார். சிலுவையிலே அறைந்துவிட்டார். நம் பாவக் கடன்களையெல்லாம் ஒழித்துவிட்டார். நமது கடன்பத்திரத்தை அழித்துவிட்டார். எனவே, நாம் இனி பாவம் செய்யாமல் வாழ்வோம். பிறரையும் தீர்ப்பிடாமல் வாழ்வோம்.

மன்றாட்டு:

இரக்கமும் மன்னிப்பும் வழங்கும் இறைவா, உமது பேரன்பால் எங்களைத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்றுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். உமது மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நாங்கள் இனி பாவம் செய்யாமல் வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.