யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-03-24

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 17: 3-7,பதிலுரைப் பாடல்: திபா: 103: 1-2. 3-4. 6-7. 8,11 (பல்லவி: 8a),திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:1-6,10-12,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 13:1-9)




பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?! பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?!


திருப்பலி முன்னுரை

இறைவனோடு மனிதரை ஒன்றாக்கும் மாண்புமிக்க இத் திருப்பலியில் பங்கேற்று தங்களையே இயேசுவோடு சேர்ந்து பலியாக்கும் இறைவனின் அன்பு மக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன்.

ஆண்டவருக்கு உரியவர்களே, இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் முன்னிலையில் தூயவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. வரலாற்றை வழிநடத்தும் கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது அழைத்தலின் மேன்மையை உணர அழைக்கப்படுகிறோம். தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், தங்களை மாசற்ற பலிப்பொருளாக அர்ப்பணிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். நாம் பாவிகள் என்பதை உணர்ந்து மனம் மாறும் பொழுது ஆண்டவரின் மீட்பை பெற்றுக்கொள்வோம். "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்" என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, தூய வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

இருக்கின்றவராக இருக்கின்றவர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 17: 3-7

அந்நாட்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார். அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே ' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார். அவர், "இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார். மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது ஆண்டவர் கூறியது: "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்: ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்." மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன? ' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே ' என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே ' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் ' என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!"

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
பதிலுரைப் பாடல்: திபா: 103: 1-2. 3-4. 6-7. 8,11 (பல்லவி: 8a)

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

மோசேயோடு மக்கள் பாலை நிலத்தில் நடத்திய வாழ்க்கை நமக்கு அறிவு புகட்டும் படிப்பினையாக எழுதப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:1-6,10-12

சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்கிறார் ஆண்டவர். (மத் 4: 17) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 13:1-9

அக்காலத்தில், சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்: எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்: நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி: இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தூய்மையின் நிறைவாம் இறைவா,

உமது அருளும் வல்லமையும் பெற்ற ஒருவரை எம் திருச்சபையை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்து, அவர் வழியாக திருச்சபையும் உலகமும் உம்மை நோக்கி முன்னேற துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, மனமாற் றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனமாற்றம் அருளும் இறைவா,

இவ்வுலகின் கவலைகளாலும், பண ஆசையாலும் உம்மை மறந்து, தீமையின் பாதையில் பயணித்து கொண்டிருக்கும் மதிகெட்ட மனிதர்களை மனந்திருப்பி, தூய வாழ்வு வாழ தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஏழைகளுக்கு இறங்குபவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்று கூறிய எம் இறைவா!

உலகமுழுவதும் உணவின்றி, உடையின்றி, வாழ்வை இழந்து உம்மையே நம்பி இருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள், வறுமையில் வாடுவோர் தனிமையில் தவிப்போர் போன்ற இவர்களின் தேவைகளைச் சந்தித்து, தங்கள் அன்பையும், அரவணைப்பையும் பகிர்ந்தளிக்கத் தேவையாக நல்ல மனப்பக்குவத்தை எமக்கு இத்தவக்காலத்தில் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருஅவையின் வருங்காலத் தூண்களை வழிநடத்தும் எம் இறைவா!

இளையோர்பால் திருஅவைக் கொண்டிருக்கும் நம்பிக்கைளை அவர்கள் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவ நம்பிக்கை வழியில் இளையோரது பங்கேற்பையும் பங்களிப்பையும் திருஅவைக்கும், சமூகத்திற்கும் செய்து நற்செய்திப் பணியாற்றுபவர்களாக இளையோர் திகழ்ந்திடவும், தங்கள் தேர்வுகளைச் சிறப்பான முறையில் எழுதி வெற்றிப் பெறவும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா!

எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் வழங்கும் இறைவா,

சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்...அழிவீர்கள்'' (லூக்கா 13:3)

இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் புதிய நிலை அடையும்; நம்பிக்கைகள் உருமாற்றம் பெறும்போது நம் செயல்கள் அவற்றிற்கு ஏற்ப அமையும். எனவே, மனம் மாறுங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பு மனித வாழ்க்கையில் பேரளவிலான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று இயேசு விரும்பியதைக் குறிக்கின்றது. மாற்றம் என்பது எப்போதுமே நலமாக அமையும் என்பதற்கில்லை. சிலர் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறக் கூடும். ஆனால் இயேசு எதிர்பார்த்த மாற்றம் அதுவன்று. இயேசு யார் என்பதை மக்கள் முழுமையாக உணராமல், இயேசுவின் வாழ்வில் கடவுள் ஒரு மாபெரும் புதுமையை நிகழ்த்துகிறார் என்பதை அறியாமல் இருந்த வேளையில்தான் இயேசு அவர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக்கொண்டு, கடவுள் தாமே இயேசுவின் வழியாக மக்களுக்கு மீட்புப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் ஏற்று, அதற்கு ஏற்ற பதில்மொழி வழங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறார்.

மனிதர் தம் வாழ்க்கை முறையை மாற்றி நல்வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் அழைப்பு விடுக்கும்போது அந்த அழைப்பினை யாவரும் உடனடியாக ஏற்றுக்கொள்வர் என்பதற்கில்லை. சிலர் தங்கள் பழைய வாழ்க்கையிலேயே ஊறிப்போயிருப்பர்; வேறு சிலர் மாற்றம் உடனடியாக வேண்டாம் என்று கால தாமதம் செய்வர்; மற்றும் சிலர் மனமுவந்து தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொணர்வர். எவ்வாறாயினும், கடவுள் பொறுமையோடு செயல்படுகிறவர். அத்திமரம் காய்த்து கனிதரும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிலிருந்து கனி தோன்றவில்லை என்றால், அம்மரத்தை உடனடியாக வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாகப் புதிதாக எருபோட்டு அதைக் கண்காணித்து அதிலிருந்து கனிதோன்றும் என்று இன்னும் ஓர் ஆண்டு பொறுமையோடு காத்திருப்பவர் நம் கடவுள் (காண்க: லூக்கா 13:6-9). என்றாலும் கடவுளின் பொறுமையை நாம் சோதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் உம் உடனிருப்பை உணர்ந்து, நற்செயல்கள் என்னும் கனியை ஈந்தளிக்க அருள்தாரும்.