யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2019-03-19

புனித கன்னிமரியாளின் கணவர் புனித யோசேப்பு




முதல் வாசகம்

உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5,12-14,16

அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: ``நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.
திருப்பாடல்89: 1-2. 3-4. 26,28

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22

சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் ``எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். ``உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்'' என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். ``அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24ய

யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு'' (மத்தேயு 1:16)

இயேசுவின் மூதாதையர் யார் என்னும் கேள்விக்குப் பதில் தருவதாக அமைந்துள்ள நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ளது (மத் 1:1-17). இதில் சில சிறப்புக் கூறுகள் உண்டு. பொதுவாக இன்னாரின் தந்தை இன்னார் என்று வரிசைப்படுத்துவதே எபிரேய வழக்கம். ஆனால் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் நான்கு பெண்களின் பெயர் வருகிறது (தாமார், இராகாபு, ரூயஅp;த்து, உரியாவின் மனைவி பத்சேபா (காண்க: 2 சாமு 11:3) என்னும் இந்நான்கு பெண்களுமே வெவ்வேறு வகைகளில் சமுதாயத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். இவர்களும் இயேசுவின் மூதாதையராகக் குறிக்கப்படுவது வியப்புக்குரிய செய்தியே. அதைவிடவும் வியப்புக்குரியது இயேசுவின் தாய் கணவரின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்து மகவாக ஈன்றளித்தது ஆகும். யோசேப்பின் வழியில் இயேசு தாவீது மன்னரின் வாரிசாகிறார். ஆனால் மரியா வழியாக அவர் கடவுளின் வல்லமையால் மனிதக் குழந்தையாகப் பிறக்கிறார்.

இயேசுவின் மனித வாழ்க்கையின் தொடக்கமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. கடவுள் கொணர்கின்ற ஒழுங்கு மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இங்கே காண்கின்றோம். குறையுள்ள மனிதரின் துணையோடு கடவுள் குறையற்ற செயல்களை நிகழ்த்த முடியும். வரம்புக்கு உட்பட்ட மனித சக்தியைவிட கடவுளின் சக்தி வலிமை வாய்ந்தது. இதை நம் வாழ்வு அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனித வலுவின்மையில் கடவுளின் வல்லமை துலங்குகிறது. இக்கருத்தைப் பவுல் அழகாக விளக்கியுள்ளார். எப்போது நாம் நம் சொந்த சக்தியைப் பெரிதாக எண்ணுகிறோமோ அப்போது அது குறையுள்ளது என்பதையும் கடவுள் நமக்கு உணர்த்திவிடுகிறார். நம் பட்டறிவு நமக்குப் பாடம் புகட்டியபின் நாம் மீண்டும் கடவுளை அணுகிச் சென்று அவருடைய கைகளில் நம்மை ஒப்புவிக்கும்போது நம் வாழ்வு ஒளிபெறும்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் வாழ்வின் தொடக்கம் என நாங்கள் உணர்ந்து உம்மை நம்பி வாழ அருள்தாரும்.