யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-03-10

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 26:4-10,பதிலுரைப்பாடல்: திபா: 91: 10-15,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:8-13,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13)




பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?! பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?!


திருப்பலி முன்னுரை

நம் ஆண்டவரில் அன்புக்குரியவர்களே,

உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் சோதனைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், நமது வாழ்க்கை சோதனைகளில் வெற்றிபெற இறைவனின் உதவி வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 26:4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது, முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினார்: துன்புறுத்தினர்: கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் ' என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும் ஆண்டவரே.
பதிலுரைப்பாடல்: திபா: 91: 10-15

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, ;நீரே என் புகலிடம்: என் அரண்: நான் நம்பியிருக்கும் இறைவன் ; என்று உரைப்பார். பல்லவி

ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்: இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். பல்லவி

'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்: அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்: அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்: அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்: அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்: பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:8-13

சகோதரர் சதோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: 'வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. ' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், 'இயேசு ஆண்டவர் ' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்: வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், 'அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் ' என்பது மறை நூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை: அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். 'ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் ' என்று எழுதியுள்ளது அல்லவா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்; (மத் 4:4a) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:1-13

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம் , ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், 'இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன: நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது. "இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக"" என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்." பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்: 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது. "இயேசு அதனிடம் மறுமொழியாக, 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே " என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உடன்படிக்கையின் இறைவா,

நீர் திருச்சபையோடு செய்துகொண்ட உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழ திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது அருளாசிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

இத்தவ நாட்களிலே எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, பகைமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் நிறைவே இறைவா,

பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விடுதலையின் தெய்வமே இறைவா!

உம்முடைய அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முயற்சிக்கும் மனிதர்கள், பொருட்கள், ஆசைகள், சந்தர்ப்பங்கள் போன்ற கொடிய சோதனைகளிலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்கும், உமது வார்த்தைக்கும் மாத்திரமே செவிசாய்த்து, உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே!இறைவா!

இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்து அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

ஆற்றல் வழங்கும் இறைவா,

சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவின் சோதனைகள் !

நமக்கு நன்கு அறிமுகமான இயேசுவின் மூன்று சோதனைகளையும், அந்த சோதனைகளிலிருந்து இயேசு எப்படி மேற்கொண்டார் என்பதையும் இன்று திருச்சபை நமக்கு சிந்தனைப் பொருளாகத் தருகிறது. மனிதராகப் பிறந்த அனைவரும் சோதனைக்குட்பட வேண்டும் என்று காட்டத்தான், பாவமே அறியாத இறைமகனாம் இயேசுவும் சோதனைகளைச் சந்திக்க முன்வந்தார். உடல் தேவைகளை நிறைவு செய்தல், உலகப் பொருள்கள்மீது பற்றுகொள்தல், இறைவனுக்கு எதிராகச் செயல்படுதல் என்னும் மூன்று தளங்களில் இயேசு சோதிக்கப்பட்டார். நமக்கும் இந்த மூன்று தளங்களிலும் சோதனைகள் எழும்.

இச்சோதனைகளை வெல்ல இயேசு கையாண்ட ஆயுதம் என்ன? இறைவார்த்தைதான்! மூன்று சோதனைகளிலும் அவர் மறைநுhலை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளைச் செயல்பாடாக்கினார். இவ்வாறு, தந்தை இறைவன்மீது அவருக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நாமும் நமது சோதனைகளை வெல்ல இந்த மூன்று உத்திகளையும் பயன்படுத்துவோம். இறைவார்த்தையைக் கொண்டும், இறைநம்பிக்கையைக் கொண்டும் நம் சோதனைகளை வெல்வோமாக!

மன்றாட்டு:

ஆற்றல் வழங்கும் இறைவா, சோதனைகளை வெல்வதற்கு இயேசுவுக்கு வலிமை தந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை சோதனையில் விழவிடாதேயும். சோதனை வேளைகளில் இயேசுவைப்போல இறைமொழி கொண்டு வெற்றி பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.