யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் சனிக்கிழமை
2019-03-02




முதல் வாசகம்

கடவுள் தமது சாயலாகவே மனிதரை உருவாக்கினார்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 1-15

ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். தமக்கு உள்ளதைப் போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார். எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார். விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். அவர்களின் உள்ளத்தைப் பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களில் மேன்மையைக் காட்டினார். தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார். அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள். அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார். அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன. `எல்லா வகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்' என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சுவோர்மீது அவரது பேரன்பு நிலைத்திருக்கும்.
திருப்பாடல் 103: 13-14. 15-16. 17-18

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். 14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. பல்லவி

15 மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16 அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. பல்லவி

17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும். 18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

செபத்தின் மாண்பு

கணவனும் மனைவியும் என்றும் இணைந்து இன்புற்ற வாழ உறுதுணையாக இருப்பது குழந்தைகள். எந்த வீட்டில் குழந்தைகள் இல்லையோ அந்த வீட்டிற்கு விருந்தினர்கள் போகவேண்டாம் என்கிறார் ஒரு அனுபவஸ்தர். ஏனென்றால் அந்த வீட்டில் எப்பொழுதும் கணவன் மனைவியிடையே சண்டை, மனத்தாங்கல் இருந்துகொண்டே இருக்கும். குழந்தைகள்கணவனையும் மனைவியையும் இணைந்து மகிழ்ந்து வாழ வைக்கும் இணைப்பாளர்கள். குழந்தைகள் இருந்தால் மட்டும் போதாது. அந்த குழந்தைகள்ஆண்டவருக்குள் வளரும் குழந்தையாக இருக்க வேண்டும். எனவே தங்கள் சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று பெற்றோர்கள்அவரிடம் கொண்டுவந்தனர் .இயேசு அவர்களைத் தொட்டு அரவணைத்து ஆசீர் வழங்கினார்.அவர்கள் வழியாக அந்த குடும்பம் முழுவதும் இயேசுவின் அரவணைப்புக்குள் என்றும் பாதுகாப்பாக இருக்கிறது. ஆசீரோடு இருக்கிறது. ஆகவே உங்கள் குழந்தைகதளை ஆண்டவரிடம் எடுத்துச் செல்லுங்கள். ஆலயத்திற்கு கூட்டி செல்லுங்கள். அருளிலும் ஒழுக்கத்திலும் கிறிஸ்தவ பண்பிலும் அவர்கள் வளர இறை பக்தியை ஊட்டி வாருங்கள். கடவுள் உங்கள் குடும்பத்தைக் கட்டி காப்பார். உங்கள் குழந்தைகள் வாழ்வார்கள். அதிலே நீங்கள் மகிழ்வீர்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.