யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் வியாழக்கிழமை
2019-02-28




முதல் வாசகம்

ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல, காலம் தாழ்த்தாதே.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 5: 1-8

உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; `எனக்கு அவை போதும்' எனச் சொல்லாதே. உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே; உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே. எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்? எனச் சொல்லாதே; ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார். `நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?' எனக் கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர். பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே. `ஆண்டவரின் பரிவு எல்லையற்றது; எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார்' என உரைக்காதே. அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன; அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும். ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே. நாள்களைத் தள்ளிப்போடாதே. ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்; அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய். முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே; பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 1: 1-2. 3. 4, 6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால் அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவ காலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 41-50

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

ஊனமுற்றவராயினும் நிலைவாழ்வில் புகுவோம்

பாவம் எப்போதும் வெறுக்க வேண்டியது. தவறு, குற்றம் எப்போதும் தவிர்க்க வேண்டியவை. இவை தொடர்பாக இங்கே இயேசு இன்னொரு அவசியமான ஒன்றையும் குறிப்பிடுகிறார். பாவத்தை மட்டுமல்ல, பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலை, இடம், பொருள், ஆள்,அது நம் உடலின் உறுப்பாயினும் வெட்டி ஒதுக்கச் சொல்கிறார்.பாவத்தைப்போல பாவத்திற்கு காரணமாய் இருக்கும் சூழ்நிலையும் ஆளும் பொருளும் உறுப்பும் உடனே வெட்டி ஒதுக்க வேண்டியவை. கையை வெட்டிவிடுங்கள். காலை வெட்டிவிடுங்கள். கண்ணைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.இவ்வாறு அவசரம் காட்டுவதால், இயேசு பாவத்திற்கான சூழ்நிலையோடு சமரசமோ தாமதமோ,நிதானமோ, ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ள விரும்பவில்லை. தன் உடலின் உறுப்பே ஆயினும், அது கண்ணே ஆயினும் தாமத்திற்கு வாய்ப்பே இல்லை என்பது இயேசுவின் தீர்க்கமான முடிவு. இதே தவறுகள் சிறியோருக்கு எதிராகச் செய்யப்படுமாயின் எந்திரக் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்தில் தள்ளிவிடச் சொல்வதிலிருந்து மேலும் இவற்றின் கனாகனத்தை உணரமுடிகிறது.சார்ந்து வாழும் குழந்தைகள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள்,ஆதரவற்றவர்கள், யாருமற்றவர்கள் இவர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய துன்பமும் இழப்பும் மிகப் பெரிய தண்டனையைப் பெறக்கூடியது. ஆகவே பாவத்தை மட்டுமல்ல பாவச் சூழலையும் குறிப்பாக சமுதாயத்தின் நலிந்தவருக்கு எதிரானவற்றைத் தவிர்த்து வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.