யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் புதன்கிழமை
2019-02-20




முதல் வாசகம்

இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருப்பதை நோவா கண்டார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 8: 6-13, 20-22

நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து, காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. பின்னர், நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார். ஆனால் அதற்குக் கால்வைத்துத் தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக்கொண்டார். அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார். மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார். இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை. அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தில் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப் பட்டவற்றை எரிபலியாகச் செலுத்தினார். ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக்கொண்டது: ``மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர்க் காலமும், பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
திருப்பாடல் 116: 12-13. 14-15. 18-19

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக!

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ``ஏதாவது தெரிகிறதா?'' என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ``மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்'' என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ``ஊரில் நுழைய வேண்டாம்'' என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்'' (மாற்கு 8:25)

மாற்கு நற்செய்தியில் இயேசு புரிந்த பல அதிசய செயல்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இயேசு பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வை அளிக்கும் நிகழ்ச்சி. இயேசு தேர்ந்துகொண்ட சீடர்கள் பலமுறையும் பார்வையற்றவர்களாகவே இருந்தார்கள். இயேசு யார் என்பதை அவர்களால் கண்டுகொள்ள இயலவில்லை. இதை மாற்கு கோடிட்டுக் காட்டுகிறார். சீடரின் மந்த புத்தியைக் காட்டுகின்ற மாற்கு அச்சீடர் பார்வை பெறுவதையும் குறிக்கத் தவறவில்லை. எனவே, பார்வையற்ற ஒரு மனிதர் இயேசுவை அணுகிச்சென்று தமக்கு இயேசு நலமளிக்க வேண்டும் என்று கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கின்ற மாற்கு அந்நிகழ்ச்சியில் உண்மையாகவே பார்வையற்றவர்களாக இருந்தவர்கள் சீடர்கள்தாம் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். இயேசு அவர்களுடைய கண்களைத் திறக்கிறார்.

சீடர்களுக்குப் பார்வை கிடைத்ததும் அவர்கள் இயேசு உண்மையிலேயே யார் என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இயேசு வெற்றி மமதையோடு வருகின்ற மெசியா அல்ல, மாறாக பல துன்பங்களைச் சந்தித்து, சிலுiயிலே அறையுண்டு, இறக்கப் போகின்ற ''மெசியா'' என்பதை அவர்கள் உணர்வார்கள். ஆயினும், அனைவராலும் கைவிடப்பட்ட மெசியாவைக் கடவுள் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வார் என்னும் உண்மையும் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று இயேசுவின் சீடர்களாக வாழ்வோர் இயேசுவைத் ''துன்புறும் மெசியா''வாக ஏற்றிடத் தயங்கலாகாது. கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கு இடம் உண்டு. ஆனால் அத்துன்பத்தின்மீதும் சாவின்மீதும் கடவுள் வெற்றிகொண்டுவிட்டார் என்னும் உண்மை நமக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் புதுப்பார்வை பெற்ற மனிதராக வாழச் செய்தருளும்.