யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-02-17

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8,திபா 1: 1-2. 3. 4-6 , திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26)




'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ' என்றார். இயேசு அவரிடம், 
'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே '! 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ' என்றார். இயேசு அவரிடம், 
'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே '!


திருப்பலி முன்னுரை

ஆண்டவரைத் தேடுவோருக்கு எந்த நன்மையும் குறைவுபடாது. ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்:

திருமகன் இயேசுவின் அன்பு நிறை உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என் இனிய (காலை/மாலை) வணக்கங்களும் வாழ்த்தும். இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றோம். இன்றைய அருள்வாக்கு வழியாக நம் இறைவன் நம்மைப் பலப்படுத்துகின்றார். ஆண்டவரைத் தேடுவோருக்கு எந்த நன்மையும் குறைவுபடாது. ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்: என்னும் விசுவாச உண்மைகள் மாபெரும் கொடையாக நமக்குக் கொடுக்கப்படுகின்றன. உண்மையான மகிழ்ச்சியும், விடுதலையும் யேசுவிடமிருந்தே வருகின்றன. உலக சக்திகளின் மீதும், ஆட்கள் மீதும், பொருட்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையும், இவைகளின் மீது நாம் கொள்ளும் கவர்ச்சியும்: சாபத்தையும், சாவையும், அழிவையும், தீமைகளையும் மாத்திரமே கொண்டுவரும் என்பதனை இன்றைய இறைவாக்குகள் அழுத்திக் கூறுகின்றன. எனவே முழு மனத்துடனும், முழு உள்ளத்துடனும் இறைவனையே தேடவும், அவரிலேயே முழு விசுவாசம் கொண்டு வாழவும் அருள் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.
திபா 1: 1-2. 3. 4-6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 45-49

சகோதரர் சகோதரிகளே, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26

அக்காலத்தில் இயேசு திருத்தூதர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந் திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

துணிந்துச் செல். நான் உன்னோடு இருக்கிறேன் என்றுரைத்த எம் இறைவா!

திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் உமது அழைப்பை ஏற்றுத் துணிவுடன் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உமது அருள்வாக்கை எடுத்துரைக்கவும், வாழ்ந்துக் காட்டிடவும் வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

இன்றைய உமது அருள்வாக்கு வழியாக நீர் வெளிப்படுத்தும் உமது விருப்பத்தையும் , சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்து கொண்டு, முழு மனத்துடனும், முழு உள்ளத்துடனும் உம்மையே ஆர்வமுடன் தேடவும், உம்மிலேயே முழு விசுவாசம் கொண்டு வாழவும், உமது விருப்பப்படி நடக்கவும் வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மை கைப் பிடித்து நடத்தும் தந்தையே! எம் இறைவா!

இன்று உலக நாடு முழுமையும் அடக்குமுறையாலும், அநீதிகளாலும், நோயினாலும், கவலையினாலும் அல்லலுறும் அனைத்து மக்கள்மீதும் மனமிரங்கி அவர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் அனைவரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவும்: உலகிலே அடக்குமுறைகள் அழிந்து: அன்பும், மனிதநேயமும், நீதியும் நிலைபெறச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் நிறைவே இறைவா,

பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள குடும்பம் என்னும் தோழமை உறவுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவரும் உம்மையே தேடி நேசிப்பதிலும் , உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும், இறையுறவிலும், சமூக உறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், சிறந்து விளங்கி உமக்குகந்த குடும்பங்களாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா!

எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களை கண்டுக் கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்”

வேறு எந்த நற்செய்தி நூலிலும் காணாத அளவு லூக்கா நற்செய்தியில் தான் ஆண்டவர் இயேசு எளியோர்மேல் கொண்ட சிறப்பான பாசத்தைத் தெளிவாகப் பார்க்கிறோம். அதிலும் பேறுகள் பகுதியை மத்தேயு நற்செய்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் வியப்படைவதைத் தவிர்க்க முடியாது. மத்தேயு நற்செய்தியில் எளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்று வாசிக்கிறோம். லுhக்கா நற்செய்தியிலோ ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள் என்னும் செய்தியை எந்தக் குழப்பமுமின்றி தெளிவாகப் பார்க்கிறோம்.

இன்று பெந்தகோஸ்து போதகர்கள் தொலைக்காட்சிகளில் தோன்றி செல்வர்களே நீங்கள் பேறு பெற்றவர்கள் ”. என்னும் செய்தியைப் போதிக்கிறார்கள். நீங்கள் செல்வந்தராக வேண்டுமா, துதியுங்கள், துதியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்”.. என்றெல்லாம் துணிந்து போதிக்கிறார்கள். ஆனால், இயேசுவின் போதனை அது அல்ல, செல்வந்தர்களே, உங்களுக்கு ஐயோ கேடு. ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள”; என்கிறார். ஏழைகள் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருக்கின்றனர். இந்த உண்மையை இன்று மனதில் ஏற்போம்.

மன்றாட்டு:

எளியோரின் புகலிடமான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். அடைக்கலம் புக யாருமே எல்லாத எளியவர்களை, ஏழைகளை நீர் ஆசிர்வதிக்கிறீர். பேறுபெற்றவர்கள் ஆக்குகிறீர். அதற்காக நன்றி கூறுகிறோம். ஏழைகள்தான் விண்ணரசின் முதல் உரிமையாளர்கள் என்பதை உணரும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.