யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-01-27

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் நெகேமியா நூலிலிருந்து வாசகம். 8:2-4, 5-6, 8-10,பல்லவி: ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-30,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-4, 4:14-21)




'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ' என்றார். இயேசு அவரிடம், 
'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே '!


திருப்பலி முன்னுரை

நற்செய்திக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் வார்த்தைகளை ஏற்று அவரில் ஒன்றித்திருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு பாவத்தின் அடிமைத்தளையால் ஒடுக்கப்பட்ட நம்மை விடுவிக்கவும், கடவுளின் திட்டம் பற்றிய சரியான பார்வையை நமக்கு வழங்கவும் இவ்வுலகிற்கு வந்தார் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மறைநூல் வாக்குகளை நிறைவேற்றிய இறைமகன் இயேசுவே நமது மீட்பர் என்று உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். மறைநூலில் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக, ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

எஸ்ரா கடவுளின் திருச் சட்டத்தை உரக்க வாசித்தார். மக்களும் அதைப் புரிந்து கொண்டார்கள்.
இறைவாக்கினர் நெகேமியா நூலிலிருந்து வாசகம். 8:2-4, 5-6, 8-10

அந்நாள்களில், ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலயில் திருநூலைக் கொண்டு வந்தார்.தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள்.எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்: திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி "ஆமென்! ஆமென்! " என்று பதிலுரைத்தார்கள்: பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்: எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம் " என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்: எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே: எனவே வருந்த வேண்டாம்: ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை " என்று கூறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா: 19: 7-9,14
பல்லவி: ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி:

ஆண்டவரின் நியமங்கள் சரியானவ அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி:

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி:

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்: என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி:

இரண்டாம் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-30

சகோதரர் சதோதரிகளே, உடல் ஒன்றே: உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், ய10தரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல: பல உறுப்புகளால் ஆனது. "நான் கை அல்ல: ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல " எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? "நான் கண் அல்ல: ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல " எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப்பார்த்து, "நீ எனக்குத் தேவையில்லை " என்றோ தலை கால்களைப் பார்த்து, "நீங்கள் எனக்குத் தேவையில்லை " என்றோ சொல்ல முடியாது. மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். நீங்கள் கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். (லூக் 4:18,19) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:1-4, 4:14-21

மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன். பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். " பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் தொடக்கமாம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றவர்களாய், திருச்சபையின் மக்களையும், உலக நாடுகளின் தலைவர்களையும் நிறை உண்மையின் பாதையில் வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மகிழ்ச்சியின் ஊற்றே இறைவா,

உலக மக்கள் அனைவரும் இறைவார்த்தையைக் கேட்டு மனம் வருந்தவும், உம்மைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொண்டு மீட்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் தேவையான உதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உண்மையின் நற்செய்தியே இறைவா,

உலக வரலாற்றில் உம் திருமகன் வழியாக நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தை எம் நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவும், உமக்கு உரியவர்களாய் வாழத் தூண்டுதல் பெறவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விடுதலையின் நிறைவே இறைவா,

பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

முன்னும் பின்னும் எங்களைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா!

இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாகப் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா!

எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களை கண்டுக் கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது;... அவர் என்னை அனுப்பியுள்ளார்'' (லூக்கா 4:18-19)

எசாயா இறைவாக்கினர் எழுதிய நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதியில் கூறப்படுகின்ற கருத்து இயேசுவின் வாழ்வில் உண்மையாகிறது. அக்கருத்தினை இயேசு தம்முடைய பணித்திட்டமாக அறிக்கையிடுகிறார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் ''ஆவி''யின் செயல் துலங்குவதை நற்செய்தி நூல்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றன. மரியாவின் வயிற்றில் கருவாக உருவான நொடியிலிருந்து இயேசு சிலுவையில் தொங்கித் தம் ஆவியைக் கையளித்த நேரம் வரை ஆவியின் செயல் வெளிப்பட்டது. ஏன், இயேசு சாவிலிருந்து ஆவியின் வல்லமையால் உயிர்பெற்றெழுந்து, தம் சீடரையும் ஆவியால் திடப்படுத்துகிறார். இவ்வாறு கடவுள் இயேசுவின் வழியாகச் செயல்பட்டதை ஆவிக்கு ஏற்றியுரைப்பதை இவண் காண்கின்றோம். கடவுளின் ஆவி தம்மில் தங்கியிருப்பதை உணர்கின்றார் இயேசு. அந்த இறைப் பிரசன்னத்திலிருந்து இயேசுவின் சொல்லும் செயலும் பணியும் பிறக்கின்றன. -- கடவுளின் ஆவி நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆவியால் வழிநடத்தப்படும் நாம் ஆவியின் தூண்டுதலைக் கண்டுகொள்ள வேண்டும். அதற்கேற்ப நடக்க வேண்டும். இயேசு எந்த ஆவியால் ''அருள்பொழிவு'' பெற்றாரோ அதே ஆவி திருமுழுக்கின் வழி நம்மையும் நிறைத்துள்ளார். இதனால் இயேசுவின் பணியில் நாமும் பங்குபெறுகின்றோம். ''ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி''யை நாம் செய்வதற்கு ஆவி நம்மைத் தூண்டுகிறார். இயேசுவைப் போல, இயேசுவைத் தொடர்ந்து நம் பணியை ஆற்றிட ஆவி நமக்கு வல்லமை அளிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆவியின் துணையோடு நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.