யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை
2019-01-14




முதல் வாசகம்

கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பல முறை, பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ``நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்'' என்றும், ``நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்'' என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ``கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துத் தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்.
திருப்பாடல் 97: 1,2. 6,7. 9

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. 7 அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

அக்காலத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ``காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

என் அன்பார்ந்த மகன் நீயே !

இன்று ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா. இயேசு திருமுழுக்கு பெற்றுத் தன் பணிவாழ்வைத் தொடங்கிய நாள். அந்தப் பணியைத் தொடங்கும் வேளையில் இயேசுவின்மேல் துhய ஆவி புறா வடிவில் இறங்கினார். வானத்திலிருந்து என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ” என்று தந்தையின் குரல் கேட்டது. இந்த இரு நிகழ்வுகளும் நமக்குத் தருகின்ற செய்தி:

1. நமது பணியை ஆற்றுவதற்குத் தூய ஆவியின் துணை வேண்டும். அவரது அருள்கர ஆற்றலின்றி நமது பணி வெற்றியடைய முடியாது.

2. தந்தை இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதே நமது பணியின், வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக, தந்தை இறைவனோடு நாம் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதற்கான அருளை இன்று மன்றாடுவோம்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவை உமக்கு மகிழ்ச்சி தரும் மகனாக அறிக்கையிட்டதுபோல, என்னையும் உம்மை மகிழ்ச்சிப்படுத்தும் மகனாக, மகளாக மாற்றுவீராக. உம்மை மாட்சிமைப்படுத்துவதே என் வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும். அதற்கான ஆற்றலைத் தூய ஆவி வழியாக எனக்கு வழங்குவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.