யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருக்காட்சி 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2019-01-11




முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப் போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக
திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை. அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16

அக்காலத்தில் இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, �ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, �நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், �இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று கட்டளையிட்டார். ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது !

இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வாக்கியத்தை நம் சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். இயேசு கடல்மீது நடந்து வந்ததையும், காற்றை அடக்கியதையும் கண்ட சீடர்கள் மிக மிக மலைத்துப் போனார்கள். ஏனெனில், அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கூறும் நற்செய்தியாளர் அதற்குத் தருகின்ற விளக்கம்தான் “அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது” என்பது.

அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ளாததனால்தான், இயேசு கடல்மீது நடந்த நிகழ்ச்சியை சீடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பங்களைப் பெருக்கியதன் மூலம் இயேசு தாமே மெசியா என்றும், விண்ணரசின் புதிய விருந்தளிப்பவர் என்றும், நிறைவான உணவை வழங்குபவர் என்றும் எண்பித்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியினால் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே, அவருக்கு இயற்கையின்மீது ஆற்றலும், அதிகாரமும் உண்டு என்பதை உணர முடியும். அப்படி உணராததால்தான் அவர்கள் மலைத்துப்போனார்கள் என்று சொல்லும் நற்செய்தியாளர் அதற்கான காரணமாக உள்ளம் மழுங்கியதைக் குறிப்பிடுகிறார். யாருக்கெல்லாம் இறைவன் ஞ்hனம் என்னும் கொடையை, நம்பிக்கை என்னும் வரத்தைத் தருகிறாரோ, அவர்களெல்லாம் இயேசுவை அருளடையாளங்களில் மெசியாவாக ஏற்றுக்கொள்வர். இறையருள் இல்லாதவர்களின் உள்ளம் மழுங்கித்தான் போகும். அந்தக் கொடைக்காக மன்றாடுவோம்.

மன்றாட்டு:

ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, எங்கள் வாழ்வில் நீர் செய்யும் அரும்பெரும் செயல்களைக் கண்டும் உம்மை எம் ஆண்டவராக, மெசியாவாக ஏற்றுக்கொள்ளாத தன்மைக்காக மன்னிப்புக் கோருகிறோம். எங்கள் உள்ளங்களைத் தூய ஆவி என்னும் கொடையால் நிரப்பி, மழுங்கிய உள்ளங்களைத் திறக்கச் செங்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்