யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2019-01-06

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 60:1-6 ,பல்லவி: ஆண்டவரே எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:2-3, 5-6,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12)
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்;! யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்;!


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!

நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர். பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்கவேண்டும்” என்கிறார். அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப்போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 60:1-6

எருசலேமே எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந் தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண் களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொ ழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர். என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

திருப்பாடல் 72:1-2, 7-8,10-13
பல்லவி: ஆண்டவரே எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்: அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதி த்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி:

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக: நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்: பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி:

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்: சேபாவிலும் செபால விலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்: எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி:

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்: ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.! பல்லவி:

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டள்ளது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:2-3, 5-6

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப் பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப் போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற் செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக் கிறோம்: அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்; என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.அஅவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், யூதேயாவிலுள்ள பெத்ல கேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே,யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வழிகாட்டும் நாயகனே எம் இறைவா!

மீட்பரைக் காண ஆவலோடு பயணத்தை மேற்கொண்ட மூன்று அரசர்களுக்கு விண்மீன் வழிகாட்டியது போல, உம் திருமகனை முழுமையாக அறிந்து, அவரின் சீடாகளாக வாழத்துடிக்கும் எங்களுக்கு நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் தங்கள் சொல், செயல் மற்றும் வாழ்வு வழியாக இயேசுவை நோக்கிய எமது பயணத்தில் விண்மீன்களாய்ச் செயல்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

தாங்கள் அரசாகளாய் இருந்தும்: மெசியா என்னும் மீட்பரைக்காண, ஏற்றுக்கொள்ள, வழிபட ஆவலோடு நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். அதேபோன்று எங்களை வழிநடாத்த நீர் கொடுத்துள்ள அனைத்துத் தலைவர்களும் தாழ்ச்சி, உண்மை, நீதி, நேர்மை, தன்னல மின்மை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், மூன்று அரசர்களையும், இயேசுவையும் தங்கள் பணி வாழ்வுக்கு மாதிரிகையாகக் கொண்டு எல்லா மக்களின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஆவலுடன் உழைக்கத் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா!

நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள் உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!

வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களை எப்பொழுதும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் அன்புத் தந்தையே!

மூன்று அரசர்கள் பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் போன்றவற்றை அமைதியின் அரசராகிய இயேசுவுக்குத் தங்களின் பரிசாகக் கொடுத்து உமது ஆசீரைப் பெற்றனர். நாங்களும் நீர் விரும்பும் தூய உள்ளத்தையும், நேர்மையான வாழ்வையும் உமக்குப் பரிசாகத் தந்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எமது வாழ்வில் நிரந்தரமாக்கிக் கொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருக்காட்சி நிகழ்வின் வழியாக உம் அன்பை எல்லா மக்களக்கும் வெளிப்படுத்திய இறைவா!

கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2)

கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.