யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 4வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-12-21




முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.''பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''செக்கரியாவும் அவர் மனைவி எலிசபெத்தும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள்... அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில் எலிசபெத்து கருவுறு இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்'' (லூக்கா 1:6-7)

கடவுளின் மீட்புத் திட்டத்தில் மனிதருக்கு முக்கிய பங்கு உண்டு. சில சமயங்களில் மனிதர் தம் பங்கை அளிக்கத் தயக்கம் காட்டுவார்கள். செக்கரியா என்னும் குரு அவ்வாறுதான் தயங்கினார். அவரும் அவருடைய மனைவி எலிசபெத்தும் தங்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கப் போவதில்லை என முடிவுகட்டிவிட்டனர். இருந்தாலும் ஒருவேளை கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்கமாட்டாரா என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். எவ்வாறாயினும், கடவுள் தம் தூதர் கபிரியேலை அனுப்பி, செக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் ஒரு மகன் பிறப்பான் என்று அறிவித்த வேளையில் செக்கரியா அச்செய்தியை நம்ப மறுக்கிறார். திருப்பீடத்தை அணுகிச் சென்று கடவுளுக்குப் பலிசெலுத்துகின்ற பேறு அவருக்கு இருந்த போதிலும், அந்நிலைக்குத் தம்மை அழைத்த கடவுளிடத்தில் செக்கரியாவுக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை.

நம் வாழ்விலும் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் கடவுள் தம் அருள்செயலை விளங்கச் செய்கின்ற தருணங்கள் உண்டு. அப்போது கடவுள் நம்மைத் தேடி வருகிறார், தம்மோடு ஒத்துழைக்க நம்மை அழைக்கிறார் என்பதை நாம் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். செக்கரியாவைப் போல நாம் தயக்கம் காண்பிக்கின்ற நேரங்கள் உண்டு. கடவுள் இவ்வாறு அதிசயமான விதத்தில் என் வழியாகச் செயல்பட முடியுமா என நாம் ஐயப்படக் கூடும். அத்தகைய ஐயப்பாடு நம்மில் இருத்தலாகாது என்பதை செக்கரியாவின் அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனிதரால் சாதிக்க இயலாதது கடவுளின் வல்லமையால் நிறைவேறும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை நம்மில் வெளிப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் மாண்புடையவர்களே. எனவே கடவுள் நம்மை அணுகி வந்து அவரோடு இணைந்து செயல்பட நம்மை அழைக்கின்ற வேளைகளில் ''ஆம்'' என நாம் பதிலிறுக்க வேண்டும். இதில் மரியா நமக்கு முன்மாதிரியாக உள்ளார். வானதூதர் வழியாகத் தமக்கு வழங்கப்பட்ட செய்தியைச் செக்கரியா நம்ப மறுத்தார் (லூக் 1:20); ஆனால் மரியா கடவுளின் வார்த்தையை நம்பி ஏற்று, ''நான் ஆண்டவரின் அடிமை'' என்று கூறிப் பணிந்தார் (லூக் 1:38). இத்தகைய பணிவு நம்மிலும் துலங்கிட வேண்டும். தம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கின்ற பேற்றினை நமக்கு வழங்குகின்ற கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்று உம்மோடு ஒத்துழைக்க எங்களை அழைத்ததற்கு நன்றி!