யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2018-12-17




முதல் வாசகம்

வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள். யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.
திருப்பாடல் 72: 1-2. 3-4. 7-8. 17

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. -பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்பட்டிருக்கும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு'' (மத்தேயு 1:16)

இயேசுவின் மூதாதையர் யார் என்னும் கேள்விக்குப் பதில் தருவதாக அமைந்துள்ள நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ளது (மத் 1:1-17). இதில் சில சிறப்புக் கூறுகள் உண்டு. பொதுவாக இன்னாரின் தந்தை இன்னார் என்று வரிசைப்படுத்துவதே எபிரேய வழக்கம். ஆனால் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் நான்கு பெண்களின் பெயர் வருகிறது (தாமார், இராகாபு, ரூயஅp;த்து, உரியாவின் மனைவி பத்சேபா (காண்க: 2 சாமு 11:3) என்னும் இந்நான்கு பெண்களுமே வெவ்வேறு வகைகளில் சமுதாயத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். இவர்களும் இயேசுவின் மூதாதையராகக் குறிக்கப்படுவது வியப்புக்குரிய செய்தியே. அதைவிடவும் வியப்புக்குரியது இயேசுவின் தாய் கணவரின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்து மகவாக ஈன்றளித்தது ஆகும். யோசேப்பின் வழியில் இயேசு தாவீது மன்னரின் வாரிசாகிறார். ஆனால் மரியா வழியாக அவர் கடவுளின் வல்லமையால் மனிதக் குழந்தையாகப் பிறக்கிறார்.
இயேசுவின் மனித வாழ்க்கையின் தொடக்கமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. கடவுள் கொணர்கின்ற ஒழுங்கு மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இங்கே காண்கின்றோம். குறையுள்ள மனிதரின் துணையோடு கடவுள் குறையற்ற செயல்களை நிகழ்த்த முடியும். வரம்புக்கு உட்பட்ட மனித சக்தியைவிட கடவுளின் சக்தி வலிமை வாய்ந்தது. இதை நம் வாழ்வு அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனித வலுவின்மையில் கடவுளின் வல்லமை துலங்குகிறது. இக்கருத்தைப் பவுல் அழகாக விளக்கியுள்ளார். எப்போது நாம் நம் சொந்த சக்தியைப் பெரிதாக எண்ணுகிறோமோ அப்போது அது குறையுள்ளது என்பதையும் கடவுள் நமக்கு உணர்த்திவிடுகிறார். நம் பட்டறிவு நமக்குப் பாடம் புகட்டியபின் நாம் மீண்டும் கடவுளை அணுகிச் சென்று அவருடைய கைகளில் நம்மை ஒப்புவிக்கும்போது நம் வாழ்வு ஒளிபெறும்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் வாழ்வின் தொடக்கம் என நாங்கள் உணர்ந்து உம்மை நம்பி வாழ அருள்தாரும்.