யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
2018-12-02

திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு.

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33:14-16,பதிலுரைப்பாடல் திபா 25:4-5, 8-9, 10,14,கிறிஸ்துவின் வருகைக்கென்று திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:12-4:2,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36)
உங்கள் உள்ளங்கள் குடிவெறி, 
களிடாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், 
அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கiயாய் இருங்கள். உங்கள் உள்ளங்கள் குடிவெறி, 
களிடாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், 
அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கiயாய் இருங்கள். உங்கள் உள்ளங்கள் குடிவெறி, 
களிடாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், 
அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கiயாய் இருங்கள்.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே இறை இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புதிய வழிபாட்டு ஆண்டைத் தொடங்குகிறோம். இந்த வழிபாட்டு ஆண்டில் ஞாயிறு மற்றும் பெருவிழா நாட்களில் மூன்றாம் ஆண்டுக்கான வாசகங்களும், வார நாட்களில் முதல் ஆண்டுக்கான வாசகங்களும் வாசக நூலிலிருந்து தேர்வு செய்யப்படும். திருமகன் பிறப்புக்காக சிறப்பான வகையில் தங்களையே அணியமாக்கும் திரு அவையின் அன்புமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

இன்று நாம் திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். இயேசுவினுடைய பிறப்பிற்கு முன்னுள்ள நான்கு வாரங்களும் திருவருகைக் காலம் என்று அழைக்கப்படுகின்றது. கிறிஸ்துவின் பிறப்பை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாட நம்மைத் தயாரிக்கும் காலமாக இக்காலம் அமைகின்றது. இயேசுவின் இரண்டாம் வருகையோடு இக்காலத்தை தொடர்புபடுத்தி சிறந்த அறிவூட்டலை இறைவார்த்தைகள் நமக்கு வழங்குகின்றன. எனவே இக்காலத்தின் மகிமையையும், பெருமையையும், புனிதத் தன்மையையும் ஆடம்பரங்களாலும், களியாட்டங்களாலும் கறைபடுத்தாதிருப்போம். இயேசுவினுடைய பிறப்பை அது குறித்துக்காட்டும் அன்பு, பகிர்வு, எளிமை, தோழமை முதலிய வாழ்க்கைப் பண்புகளோடு பொருளுணர்ந்து கொண்டாட இறையருள் வேண்டித் தொடரும் பலியில் பக்தியோடு பங்கேற்போம்.முதல் வாசகம்

தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33:14-16

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
பதிலுரைப்பாடல் திபா 25:4-5, 8-9, 10,14

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்@ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும் ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

ஆண்டவர் நல்லவர் நேர்மையுள்ளவர் ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் இவர் நடத்துகின்றார் எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.ஆண்டவரின் அன்புறவு அவருக்க அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும் அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
கிறிஸ்துவின் வருகைக்கென்று திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:12-4:2

சகோதர சகோதரிகளே, உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்: அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும் உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36

அக்காலத்தில் மானிடமகன் வலுகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது:"கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபைக்காக:

கருணைக் கடலே இறைவா! உம்முடைய திருவருகைக்காக இறைமக்களைத் தயார்படுத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இறைமக்களை நல்ல முறையில் தயாரிக்க வேண்டிய வார்த்தைகளையும், செய்திகளையும் அவர்களுடைய வாயில் ஊட்டி, ஞானத்தையும், வல்லமையையும் அவர்கள்மேல் நிறைவாகப் பொழிந்து அவர்களை ஆசீர்வதித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆதரித்துக் காக்கும் இறைவா!

ஆயனில்லா ஆடுகள்போல இன்று தவித்து நிற்கும் மக்களை கருணையுடன் கண்ணோக்கிப் பாரும். அவர்களின் துன்ப துயரங்களைப் போக்கி, அவர்கள் சரியான திசையை நோக்கிப் பயணிக்கவும், என்றும் அமைதியையும், உடல், நலத்தையும், பாதுகாப்பையும் பெற்று வாழவும், உமது அன்பின் சிறகுகளுக்குள் அவர்களை வைத்துக் காத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!

மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மனஉளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்து தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிட தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னைப் படைத்தவரை உன் வாலிப நாட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா!

இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா!

வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையாளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீக தயாரிப்புகளில் எங்களை புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா!

இப்பொழுது கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் தங்கள் இருப்பிடம் இழந்து, உறவுகளை இழந்து, வேதனையில் தவிக்கும் எம் சகோதர, சகோதரிகளுக்கு நீரே ஆறுதலாய் இருந்து, அவர்களைத் தேற்றி, மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது'' (லூக்கா 21:28)

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ''ஒத்தமை நற்செய்திநூல்களில்'' எருசலேமின் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று கலந்த விதத்தில் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: லூக் 21:20-28). எருசலேம் நகரம் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70) அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர்; எஞ்சியோர் பெருந்துன்பங்களுக்கு ஆளாயினர். அந்நிகழ்வுகளின் பின்னணியில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. வான மண்டலத்தில் அடையாளங்கள் தெரியும், கடல் கொந்தளிப்பு ஏற்படும்; மக்கள் தங்களுக்கு ஏற்படப் போகின்ற அழிவு குறித்து அஞ்சி நடுங்குவர் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால் இந்த அச்சுறுத்தும் அடையாளங்களின் நடுவே ஆறுதல் தரும் வார்த்தையும் உரைக்கப்படுகிறது. அதாவது, மானிட மகன் மாட்சியோடு வருவார்; மனிதரின் மீட்பு நிறைவுறும்.

மனிதர்கள் அச்சத்தால் நடுங்குகின்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆறுதல் செய்தி இது: ''நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' (லூக் 21:28). இவ்வாறு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிப்படையான காரணம் ''நமது மீட்பு நெருங்கி வருவது''தான். இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன? பண்டைக் காலத்தில் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது கடவுள் அவர்களுடைய ஏக்கமிகு மன்றாட்டுக்குச் செவிமடுத்தார். தம் மக்களின் வேதனையைப் போக்கிட அவர் முன்வந்தார். எனவே, இஸ்ரயேல் மக்கள் ''இடையில் கச்சை கட்டி'', ''கால்களில் காலணி அணிந்து'', ''கையில் கோல்பிடித்து'' பாஸ்கா உணவை உண்ணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர் (காண்க: விப 12:11). இவ்வாறு, பயணம் போகத் தயாரான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கடவுளின் வல்லமையால் அவர்கள் விடுதலையும் மீட்பும் அடைந்தார்கள். இயேசுவும் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார். உலகம் என்று முடிவுக்கு வரும் எனத் தெரியா நிலையிலும் நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க இயேசு நம்மை நோக்கித் ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' எனக் கேட்கின்றார் (லூக் 21:28). நமக்குக் கடவுள் வழங்குகின்ற மீட்பு நம்மை நெருங்கி வந்துவிட்டது என்னும் நல்ல செய்தி நமக்கு மகிழ்ச்சி தர வேண்டும். உலக அழிவு பற்றி அச்சமுறாமல் நாம் ''தலைநிமிர்ந்து நின்று'', நம் கடவுளிடமிருந்து வருகின்ற மீட்பை நன்றியோடு ஏற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, அழிவுச் சக்திகளைக் கண்டு அஞ்சாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.