யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் திங்கட்கிழமை
2018-11-26




முதல் வாசகம்

கிறிஸ்துவின் பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்தனர்.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 14: 1-5

யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை போலும் ஒலித்தது. அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள். ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல் 24: 1-2. 3-4

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார். அவர், ``இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37)

வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆங்கில ஆண்டு மாதங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஆண்டின் தொடக்கம் ஜனவரி மாதம். நிறைவு டிசம்பர் மாதம். இதே போல, திருச்சபையில் வழிபாட்டு ஆண்டு இருக்கிறது. இதனை காலங்களாகப் பிரிக்கிறார்கள். திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் மற்றும் பாஸ்கா காலம். வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் திருவருகைக்காலம். நிறைவு வாரம், கிறிஸ்து அரசர் பெருவிழா வாரம். இதுதான் பொதுக்காலத்தின் நிறைவாகவும், வழிபாட்டு ஆண்டின் கடைசி வாரமாகவும் இருக்கிறது. எதற்காக கிறிஸ்து அரசர் பெருவிழா, திருவழிபாட்டு ஆண்டின் கடைசி வாரத்தில் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்துவின் மகிமையை திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இதற்கு காரணம். அதேபோல, திருவருகைக்காலங்களில் சுட்டிக்காட்டப்படும் இயேசுவின் வருகை மற்றும் உலகத்தின் இறுதிநாட்கள் போன்றவற்றையும், இதில் நாம் சிறப்பாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இறைவன் தான் நமக்கு என்றும் அரசர், அவருக்கே என்றென்றும் மகிமையும், ஆராதனையும், புகழ்ச்சியும் என்பதை உறுதிப்படுத்த வந்த விழா தான், இந்த கிறிஸ்து அரசர் பெருவிழா. இஸ்ரயேல் மக்களுக்கு, யாவே இறைவனைத்தவிர வேறு யாரும் அரசர் கிடையாது. அவர்களை ஏற்றுக்கொள்வதும் கிடையாது. இறைவன் ஒருவரே அரசர். அவரைத்தவிர வேறு யாரையும், அந்த இடத்தில் வைப்பது கிடையாது. அதே போல, இந்த விண்ணகம் மற்றும் மண்ணகத்தின் அரசர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவர் சாவையே வெற்றி கொண்டு நமக்கெல்லாம் வாழ்வு கொடுத்தவர். அந்த வாழ்வை நமக்குக் கொண்டு வந்து, மீட்பராக, அரசராக இந்த வரலாற்றிலும் அவர் நிலைகொண்டிருக்கிறார்.

நாம் அனைவருமே அவரால் வாழ்வு பெற்றுள்ளோம். அவரது தியாகத்தால் மீட்பு பெற்றுள்ளோம். அந்த வாழ்வுக்கு தன்னையே அவர் தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் விலையாகக் கொடுத்தார். அத்தகைய அரசரை பெற்றுள்ள நாமும், நமது வாழ்வில், மற்றவர்களுக்காக, நம்மையே இழக்க முன்வருவதற்கு, இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது.

மன்றாட்டு:

எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருள்தாரும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.