யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-11-23




முதல் வாசகம்

நான் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 10: 8-11

சகோதரர் சகோதரிகளே, விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ``கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்'' என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, ``இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்'' என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. ``பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'' என்று எனக்குச் சொல்லப் பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
திருப்பாடல் 119: 14,24. 72,103. 111,131

14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவை எனக்கு அறிவுரை தருகின்றன. -பல்லவி

72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. 103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. -பல்லவி

111 உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன. 131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நாமே இயேசுவின் தாயும், சகோதரரும்!

இயேசுவின் தாய், மற்றும் சகோதரர், சகோதரிகள் என்னும் உயர்ந்த இடத்தை இயேசு நமக்குத் தர முன்வருவது ஒரு வியப்பான வாய்ப்பு. யாரெல்லாம் இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் அனைவருமே இயேசுவின் தாயும், உடன் பிறந்தோரும்தான். இந்த மகிழ்ச்சியான நற்செய்திக்காக நன்றி கூறுவோம். சரி, இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவது எப்படி? பல வழிகள் இருக்கின்றன. இதோ, அவற்றுள் ஒன்று; நமக்கு விருப்பமில்லாத, எதிர்பாராத நிகழ்வுகள் அவ்வப்போது நம் வாழ்வில் நடக்கின்றன. நமக்கு எரிச்சலையும், கசப்புணர்வையும் தருகின்றன. அந்த நேரங்களில் எல்லாம். இதுவும் இறைவனின் திருவுளமாக இருக்கலாம். இதன் வழியாகவும் இறைவன் எனக்க நன்மையைச் செய்யலாம். எனவே, இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நன்றி கூறுகிறேன்” என்று சொல்வது இறைத் திருவுளத்துக்குப் பணியும் ஒரு செயலாக மாறுகிறது. இந்த நாள் முழுதும் இதை முயற்சி செய்வோமா?

மன்றாட்டு:

தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் போலNவு நானும் இறைத் தந்தையின் விருப்பத்தை எப்போதும் நிறைவேற்றி, அவருக்கு மாட்சியளிக்க எனக்கு அருள்தாரும். இந்த நாளில் நான் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.