யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் புதன்கிழமை
2018-11-14




முதல் வாசகம்

தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார்.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-7

அன்பிற்குரியவரே, நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்; அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். எவரையும் பழித்துரைக்கலாகாது; சண்டையிடலாகாது; கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும். ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்; தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல்23: 1-3-4. 5. 6

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3 தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ``ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, ``பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், ``எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நன்றியின் நன்மைகள் !

நேற்றைய நற்செய்தி வாசகத்துக்கும், இன்றைய வாசகத்துக்கும் ஏதாவது முரண்பாடு தெரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால், முரண்பாடும், ஆய்ந்து பார்த்தால் முரண்பாடின்மையும் புலப்படுகின்றன. நன்றி உணர்வைப் பொறுத்த அளவில் இயேசுவின் போதனை தெளிவாகவே இருக்கிறது. நாம் நன்மைகள் செய்யும்போது, பலனை, பாராட்டை, நன்றியை எதிர்பாராது செய்ய வேண்டும். ஏனென்றால், அது நமது கடமை, நம்மேல் சுமத்தப்பட்ட பளு. மேலும், நாம் செய்கின்ற நன்மைகளின் ஊற்று இறைவனிடம் இருந்தே வருகிறது. எனவே, நமக்கென்று சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. ஆனால், பிறரிடமிருந்து நாம் பெறுகின்ற நன்மைகளுக்கு நாம் மறவாமல் நன்றி பாராட்ட வேண்டும். ஏனென்றால், அந்த நன்மை நமது உரிமையல்ல, மாறாக இறைவனின் அருள் மேலி;;ட்டால் அருளப்பட்ட கொடை. எனவே. இறைவனுக்கும், இறைவன் யார் வழிகாக அதை அருளினாரோ அவர்களுக்கும் நன்றி செலுத்துவது நமது கடமை. மேலும், நன்றி சொல்வதால், நமது மனம் பரவலாகிறது. நமது கொடைகள் நமக்குச் சொந்தம் அல்ல என்னும் எண்ணம் வலுவடைகிறது. நன்றி தாழ்வு மனத்தைப் போக்கி, தன்னம்பிக்கையைத் தருகிறது. போதும் என்று மனநிலையைத் தருகிறது. பிறரைச் சார்ந்து வாழ்கிறோம் என்னும் தாழ்ச்சியை, எளிய மனத்தைத் தருகிறது. எனவே, எப்போதும் நன்றி சொல்வோம். நன்றி மனநிலையோடு வாழ்வோம்.

மன்றாட்டு:

நன்மைகளின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் நீர் எங்களுக்குத் தந்திருக்கிற அனைத்துக் கொடைகளுக்காகவும், நன்மைகளுக்காகவும், ஆசிகளுக்காகவும் ;நாங்கள் நன்றி கூறுகிறோம். நல்ல மனிதர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் நன்றி. அந்த உறவுகளின் வழியாக நீர் தருகின்ற மகிழ்ச்சி, நிறைவு, நன்மைகளுக்காகவும் நன்றி. நாங்கள் எந்நாளும் உமக்க நன்றியுள்ளவர்களாக வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.