யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-11-11

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 17:10-16,பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு:,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 9:24-28,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44)




இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.. இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.. இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்..


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் அன்புக்கும், அரவணைப்புக்கும் உரிய அன்பு மக்களே ஆண்டின் பொதுக்காலம் 32 ஆம் வார ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன். வாழ்வில்லை, வழியில்லை, உதவிட யாருமில்லை என்ற அங்கலாய்ப்பிலும், மனவேதனையிலும் இருப்போருக்கு மாபெரும் ஆறுதலின் செய்தியாக இன்றைய இறைவார்த்தைகள் அமைந்துள்ளன. இறைவன் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் சார்பாக நின்று செயலாற்றுகின்றார், உணவளிக்கின்றார், விடுதலை அளிக்கின்றார், குணமாக்குகின்றார், பாதுகாக்கின்றார், ஆதரிக்கின்றார், அன்பு செலுத்துகின்றார் என்பதே நமக்கு மகிழ்வு தரும் அச் செய்திகளாகும். இறைவனுடைய இம் மாபெரும் அருளிரக்கத்திற்காக நன்றி கூறிக்கொண்டு, நிபந்தனையற்ற விதத்தில் அவருடைய அன்பையும், இரக்கத்தையும் நமது முன்மாதிரிகையான வாழ்வால் மற்றவருக்கு எடுத்துரைக்கும் சாட்சிகளாய் வாழ இத்திருப்பலியில் அருள் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 17:10-16

அந்நாட்களில், எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, "ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, "எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?" என்றார். அவர், "வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்" என்றார். எலியா அவரிடம், "அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே; நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது" என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா. 146:7-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு:

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி:

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான் களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி:

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைக ளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி:

இரண்டாம் வாசகம்

பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 9:24-28

கோதரர் சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44

அக்காலத்தில், இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே" என்று கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்லாத் தலைமுறையினரையும் இரக்கத்தோடு ஆட்சி அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நிறை ஞானத்தோடும், விவேகத் தோடும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளவர்களை வழி நடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும், இரக்கமும் உள்ள தந்தையே இறைவா!

நாங்கள் ஒவ்வொருவரும் கருணையும, இரக்கமும், அன்பும் உள்ளவர்களாகவும், நிபந்தனையின்றி அன்புப் பணிக்காக எம்மையே அர்ப்பணிக்கும் நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா!

மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா!

எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

தொங்கல் ஆடையா? ஒரு கொதிராந்தா?

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தயாகம் செய்வதால் தானா அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெறிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இங்கே காண்கிறோம். இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் தொங்கலாடை, ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவற்றின் வெளி அடையாளம். கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

செல்வத்தில் எல்லாம் பெருஞ்செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நீர் எங்களுக்குத் தருகின்ற இந்த மூன்று அறிவுரைகளையும் நாங்கள் ஏற்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.