யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் புதன்கிழமை
2018-11-07




முதல் வாசகம்

கடவுளே நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18

என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள். ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார். முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும். நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். அது போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல் 27: 1. 4. 13-14

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: ``என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது'' (லூக்கா 14:33)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தம் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பது சிலருக்குக் கடினமான ஒரு போதனையாகத் தோன்றலாம். மனிதருடைய உள்ளத்தில் இடம் பிடித்துக்கொள்கின்ற எதுவும் அவரைத் தமக்கு அடிமையாக்க முயற்சி செய்யக் கூடும். பொருள், உறவு, குடும்பம் போன்ற தளைகள் நம்மை இறுகப் பிணைத்துவிட்டால் கடவுளோடு நமக்குள்ள உறவு முறிவதற்கான ஆபத்து எழக் கூடும். இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவைப் பின்செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் வேறு எந்த பொருளுக்கோ மனித ஆளுக்கோ நாம் முதன்மையிடம் அளித்தலாகாது. இதனால் நம் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் நாம் ''வெறுக்கவேண்டும்'' என்று பொருளாகாது. ஆனால், மனித உறவு எதுவும் கடவுளின் உறவுக்கு அடுத்த படியில்தான் அமைய வேண்டுமே ஒழிய அதை முந்திவிடக் கூடாது. இதையே இயேசு போதிக்கிறார்.

நம் உயிர் மட்டில் நமக்குப் பற்று இருப்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் ஒன்றில் நாம் அந்த ஆபத்தை எதிர்த்துப் போராடுவோம், அல்லது அந்த ஆபத்திலிருந்து தப்பித்து ஓடிப்போவோம். ஆனால் இயேசு நம் உயிர்மட்டில் நமக்கு இருக்கின்ற பற்றினைவிட அதிகப் பற்றோடு நாம் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறார். இதற்கு ஒரு காரணம் நம் உயிரே கடவுளின் கொடை என்பதுதான். கடவுளிடமிருந்தே அனைத்தையும் நாம் கொடையாகப் பெற்றுக்கொள்வதால் கொடையைத் தருகின்ற வள்ளலை நாம் ஏற்கும்போது அவர் தருகின்ற கொடைகளையும் நன்றியோடு ஏற்போம். ஆனால், நாம் பெறுகின்ற கொடையே அக்கொடையை நமக்கு அளித்தவரின் இடத்தைப் பிடித்துக்கொள்ளா விதத்தில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். பொருளையும் உறவையும் குடும்பத்தையும் நட்பையும் இயேசுவின் பொருட்டுத் துறந்துவிடுதல் அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தும் வகையில் இயேசு ''நாம் நம் சிலுவையைச் சுமந்துகொண்டு அவர்பின் செல்ல'' நம்மை அழைக்கிறார் (காண்க: லூக்கா 14:27). இயேசுவின் சிலுவை என்பது இயேசு அனுபவித்த துன்பத்திற்கு அடையாளம்; அதுவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பத்திற்கும் அடையாளம். ஆக, இயேசுவின் பின் செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் பற்றற்ற நிலை உருவாக வேண்டும்; அதே நேரத்தில் கடவுளிடத்தில் நம் பற்று வளர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவைப் பின்செல்வதில் நாங்கள் நிலையாய் இருக்க அருள்தாரும்.