யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-11-06




முதல் வாசகம்

தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 5-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!
திருப்பாடல் 22: 25-26. 27-29. 30-31

உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! பல்லவி

27 பூவுலகின் கடையெல்லை வரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 28 ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார் மீதும் அவர் ஆட்சி புரிகின்றார். 29ய மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர். பல்லவி

30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு `இதை அவரே செய்தார்' என்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24

அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், ``இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, `வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது' என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், `வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார். `நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர். `எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர். பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், `நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்' என்றார். பின்பு பணியாளர், `தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, `நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' '' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்'' (லூக்கா 14:18)

இறையாட்சியை விருந்துக்கு ஒப்பிட்டார் இயேசு. கடவுள் நம்மை ஒரு விருந்துக்கு அழைக்கிறார். அவருடைய கொடைகளைத் தாராள உள்ளம் கொண்டு நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். விருந்துக்கு ஒருவரை அழைப்பது அவருடைய பசியை ஆற்றுவதற்கு உணவு கொடுப்பதற்கு மட்டுமல்ல, அழைக்கப்பட்டவரோடு உரையாடி, அவரோடு நமக்குள்ள நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கும் விருந்து ஒரு சிறந்த தருணமாகிறது. எனவேதான் இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் என்பது தலைசிறந்த பண்பாகக் கருதப்பட்டது. கடவுள் வழங்கும் விருந்து உண்மையிலேயே ஒரு ''பெரிய விருந்து'' (லூக்கா 14:16). அதற்கு அழைக்கப்படுவோர் மிகப் பலர்; அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவும் உயர்ந்த தரமானது. எனவே, இப்பெருவிருந்தில் கலந்துகொள்ளச் செல்வோர் மன மகிழ்ச்சியோடு போவார்கள், நிறைவாக உண்டு இன்புறுவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்கு நேர்மாறான நிலையைத்தான் பார்க்கிறோம். அழைக்கப்பட்டோர் எல்லாரும் ''ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்'' (லூக்கா 14:18). புதிதாத வயல் வாங்கிய மனிதர் தம் சொத்து நல்ல நிலையில் உளதா எனப் பார்க்க விரும்புகிறார்; புதிதாக ஏர்மாடுகள் வாங்கியவரும் அவற்றை ஓட்டிப்பார்க்க விரும்புகிறார்; புதிதாக மணம் செய்தவர் குடும்பக் காரியங்களைக் கவனிக்க விரும்புகிறார். விருந்திற்குக் கட்டாயம் போக வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் மட்டுமே சாக்குப்போக்குகள் காட்டாமல் விருந்தில் கலந்துகொள்ளச் செல்வார்கள். வேறு எந்தக் கடமையும் விருந்திற்குப் போகின்ற கடமையைவிட மேலானதல்ல என்று முடிவுசெய்தால் மட்டுமே நாம் கடவுள் அளிக்கின்ற விருந்தில் பங்கேற்க எவ்விதத் தயக்கமுமின்றிச் செல்வோம்.

சாக்குப்போக்குச் சொல்வது மனித இயல்பு. சிலர் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்குச் சாக்குப்போக்குச் சொல்வர். வேறு சிலர் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அவை அனைத்தையும் நன்முறையில் நிறைவேற்ற இயலாதபோது ஒருசில பொறுப்புகளை முதன்மைப்படுத்தி அவற்றை மட்டுமே நிறைவேற்றிவிட்டு வேறு பொறுப்புகளைப் பெரிதாகக் கருதாமல் விட்டுவிடுவார்கள். இயேசு விடுக்கின்ற அழைப்பு கடவுளின் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்பதே. இந்த அழைப்புக்குச் செவிமடுப்பது நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் என நாம் தீர்மானித்துவிட்டால் வேறு எந்தப் பொறுப்பும் நம் கவனத்தை முழுமையாக ஆட்கொள்ள இயலாது. கடவுளின் அழைப்பை ஏற்று, அவர் படைக்கின்ற விருந்தில் பங்கேற்பதே நம் வாழ்க்கையின் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் அளிக்கின்ற அன்பு விருந்தில் நாங்கள் பங்கேற்று நிறைவடைய எங்களுக்கு அருள்தாரும்.