யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-10-19




முதல் வாசகம்

கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டோம்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11-14

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாடவேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 33: 1-2. 4-5. 12-13

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி 4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7

அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: ``பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

மறைந்திருப்பது ஒன்றுமில்லை !

வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை என்னும் ஆண்டவரின் அமுத மொழிகள் இன்று நம் சிந்தையைக் கவர்கின்றன. நமது மிகவும் மறைவான செயல்கள்கூட இறைவனின் பார்வைக்கு உட்பட்டே இருக்கின்றன. பூமியின் ஆழத்திற்கு நான் சென்றாலும், அங்கேயும் நீர் இருக்கின்றீர் என்று திருப்பாடல் 139ல் வாசிக்கிறோம். இறைவனிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. அதுபோல, மனிதரிடமிருந்தும் நாம் நீண்ட நாள் மறைக்க முடியாது. பிறரிடமிருந்து நாம் எவ்வளவுதான் மறைத்தாலும், ஒருநாள் அனைத்தும் வெளிப்படத்தான் போகின்றன. இது வாழ்வின் நியதி. நம் அனுபவ உண்மையும்கூட. எனவே, நமக்கு தேவையானது வெளிப்படையான எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள். ஒளிவு மறைவற்ற நேர்மையே புனிதம் என்றுகூட ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் சிந்தனையாளர்; பகர்ந்துள்ளார். நமது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும்போது, நமது உறவுகளும் மேம்படும். நமது ஆன்மீக வாழ்வின் தரமும் உயரும். எனவே, சொல்லிலும், செயலிலும் ஒளிவுமறைவற்ற தன்மையைக் கடைப்பிடிப்போம். நமது இல்லத்திலும், பணியிடத்திலும் இதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடிப்போம். இந்த நேர்மையே ஒரு நற்செய்தி அறிவிப்பு என்பதை நினைவில் கொள்வோம்.

மன்றாட்டு:

புனிதத்தின் ஊற்றே இறைவா, நாங்கள் உம்மிடமிருந்தும், பிறரிடமிருந்தும் எதையும் மறைக்காமல், திறந்த மனதுடன், திறந்த மேலாண்மையுடன் வாழ வரம் தாரும். யாரிடமும், எதையும் மறைக்கத் தேவையில்லாத, நேர்மையான வாழ்வை எங்களுக்கு அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.