யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-10-14

(இன்றைய வாசகங்கள்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம்: 7:7-11,பதிலுரைப்பாடல்: திபா. 90:12-17,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4:12-13,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30)




நல்ல போதகரே நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?. நல்ல போதகரே நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?. நல்ல போதகரே நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?.


திருப்பலி முன்னுரை

இறைவனுக்குரியவர்களே,

இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் ஆண்டின் 28 ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். கடவுளைவிட உலகப் பொருட்களில் அதிகப் பற்று வைக்கும் எவரும் இறையாட்சில் நுழைய முடியாது என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளை அறிந்து, அவரை அன்புசெய்து வாழவே படைக்கப்பட்டிருக்கிறோம். இறை உறவிலும், மனித உறவிலும் நாம் வளர்ச்சி காண கடவுள் வழங்கியுள்ள பத்து கட்டளைகள் நமக்கு வழிகாட்டுதலாக அமைந்துள்ளன. அவற்றைச் சுருக்கி ஒரே அன்பு கட்டளையாக இயேசு நமக்கு வழங்கினார். நமது அன்பு செயல் வடிவம் பெறும் பொழுதுதான் நாம் இறையாட்சிக்கு நெருக்கமானவர்களாக மாற முடியும். செல்வம், உறவு, புகழ் என எது அன்புக்குத் தடையாக இருந்தாலும் அங்கு இறையாட்சி தடுக்கப்படுகிறது. உலகப் பொருட்களைப் புறக்கணித்து இறையாட்சியை விரும்பித் தேடும் நல்ல மனம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்:
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம்: 7:7-11

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை, அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.
பதிலுரைப்பாடல்: திபா. 90:12-17

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்: அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்: எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்: அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர் ந்து மகிழ்வோம். எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக எம்மை மகிழச் செய்யும். பல்லவி

உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளுடைய வார்த்தை உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4:12-13

சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு நல்ல போதகரே நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? கொலைசெய்யாதே: விபசாரம் செய்யாதே: களவு செய்யாதே: பொய்ச்சான்று சொல்லாதே: வஞ்சித்துப் பறிக்காதே: உன் தாய் தந்தையை மதித்து நட என்றார். அவர இயேசுவிடம் போதகரே இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் என்று கூறினார. அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து, நோக்கி உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பாரத்துத் தம் சீடரிடம் "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து "பிள்ளைகளே செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய் பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல கடவுளால் எல்லாம் இயலும்" என்றார். அப்போது பேதுரு அவரிடம் "பாரும் நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவரகளாயிற்றே" என்று சென்னார். அதற்கு இயேசு "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தாயையோ தந்தையையோ பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும் இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,

எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், திருச்சபை நிறுவன திருச்சபையாக அல்லாமல் பணி வாழ்வே திருச்சபையின் மையம் என்னும் மனநிலை திருச்சபையில் மலர இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. எம் வாழ்வுக்கு ஆதரவாயுள்ள தந்தையே!

இன்றைய சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், இனம், மொழி வேறுப்பாடு, சுயநலம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் திருச்சபையில் மறைந்து, பரந்த உண்மையான கிறிஸ்து இயேசுவின் மனநிலை எல்லோரிலும் மலர, ஏழைகளின் வாழ்வு மலர, திருச்சபையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல முன்னேற்ற பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. உண்மையின் ஊற்றாம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை, நீதி, அமைதி உண்மை ஆகியவற்றை விரும்பித் தேடவும், அதன் வழியாக உமது உண்மையான அன்பையும், இரக்கத்தையும் உணரவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. கொடைகள் அனைத்திற்கும் ஊற்றான இறைவா!

எம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி எம்மையே நாங்கள் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர, விட்டுக்கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உம் மூலம் அறிந்து வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா!

யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. நீதியின் ஊற்றாம் இறைவா,

உலகில் பண ஆசை, பதவி மோகம், மத வெறி, தன்னலம், இன வெறி போன்ற காரணங்களால் நீதி மறுக்கப்படும் இடங்கள் அனைத்திலும் உம் இறையாட்சியின் மதிப்பீடுகள் விதைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

செல்வமா, மீட்பா ?

செல்வத்தைப் பற்றிய பார்வையில் கத்தோலிக்கப் போதனைக்கும், பெந்தகோஸ்து சபையினரின் போதனைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அடிப்படையில், அது பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாடுதான். பழைய ஏற்பாடு செல்வத்தை இறைவனின் கொடையாகவும், ஆசியாகவும் பார்த்தது. செல்வம் இருப்போர் இறையாசி பெற்றவர்களாகவும், செல்வம் இல்லாதோர் இறையாசி குறைந்தவர்களாகவும் பார்க்கப்பட்டனர். ஆனால், புதிய ஏற்பாட்டில் இயேசு இந்தப் பார்வையைத் தலைகீழாக புரட்டிப் போட்டார். செல்வம் மீட்பு அடைவதற்குத் தடை என்று ஆணித்தரமாகக் கூறினார். ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும் போதித்தார்.

இன்றைய பெந்தகோஸ்து போதகர்கள் அனைவருமே பழைய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் இயேசுவின் புதிய போதனையைப் போதிக்காமல், பழைய ஏற்பாடு சொல்கின்ற கட்டளைகள், போதனைகள், பத்திலொரு பங்கு காணிக்கை, பரிசேய வாழ்வு போன்றவற்று முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு பிரபலமான பெந்தகோஸ்து போதகர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டுமா, கடவுளைத் துதியுங்கள் என்று நிதி நிறுவன ஏஜென்ட் போலப் போதித்ததைப் பார்த்து வியப்படைந்தேன். நல்லவேளை, இயேசுவின் போதனை தெளிவாக இருக்கிறது. செல்வர்கள் இiறாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். இம்மண்ணகத்தில் செல்வராய் இருப்பதைவிட, விண்ணகத்தில் செல்வராய் இருப்பதுதான் முக்கியம். அதற்கு நம்மிடம் உள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்போதனை பற்றித் தெளிவாக இருப்போம். பிறருக்கும் எடுத்துரைப்போம்.

மன்றாட்டு:

ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைவிடப் பெரிய செல்வம் எதுவுமில்லை என்று ;நாங்கள் உணரச் செய்யும். எங்களிடம் இருக்கும் செல்வம், ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் பிறரோடு நாங்கள் பகிர்ந்து வாழ அருள்தாரும். இதனால், நாங்கள் விண்ணகத்தில் செல்வர்களாய் மாறுவோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.