யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-10-05




முதல் வாசகம்

காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?
யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று. அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும். கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்! ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ! யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.
திருப்பாடல் 139: 1-3. 7-8. 9-10. 13-14

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14யb அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

"இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை"(மத்தேயு 11:20)

மனித வாழ்க்கையில் மன மாற்றம் ஏன், எப்படி நிகழ்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இயேசு நிகழ்த்திய அரிய செயல்களை, அதிசயங்களைக் கண்ட மக்கள் பலர். ஆனால் அவர்களில் சிலரே இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டு, அவரைப் பின்தொடர்ந்தார்கள். மிகப் பலர் இயேசு புரிந்த அருஞ்செயல்கள் அலகையின் வல்லமையால் நிகழ்ந்தன என்று கூறி இயேசுவை இகழ்ந்தார்கள். நம் வாழ்விலும் இந்த விபரீதத்தை நாம் காணலாம். கடவுள் நமக்கு எத்துணை நன்மை செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல், அவரைக் கண்டுகொள்ளாமல் நாம் செயல்படுகின்ற நேரங்கள் உண்டு. அதிசய செயல்கள் நம் வாழ்க்கையில் நிகழ்ந்தாலும் அவற்றின் பின்புலத்தில் கடவுளின் வல்லமை உள்ளது என அடையாளம் காண நாம் தவறிவிடுகிறோம். நம் அகக் கண்களை நாம் திறந்துபார்த்தால் நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற அனைத்திலும், நம் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொன்றிலும் நம் அன்புக் கடவுளின் அருட்கரத்தை நாம் கண்டுகொள்வோம். அப்போது நம் இதயத்தில் மாற்றம் ஏற்பட்டு நாம் கடவுளை நோக்கித் திரும்புவோம்.

மன்றாட்டு:

இறைவா, ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களை நீர் வழிநடத்திச் செல்கின்றீர் என்னும் அதிசயத்தை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.