யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் திங்கட்கிழமை
2018-09-24




முதல் வாசகம்

நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 3: 27-35

உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, `போய் வா, நாளைக்குத் தருகிறேன்' என்று சொல்லாதே. அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா? ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே. வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே. ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவு கொள்கின்றார். பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும். செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்; ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
திருப்பாடல் 15: 2-3. 3-4. 5

மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். பல்லவி

3bஉ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: ``எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகையால், நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை'' (லூக்கா 8:16)

இரபீந்திரநாத் தாகுர் எழுதிய எழில் மிகு கவிதைகளில் ஒன்று ''உன் திரு யாழில் என் இறைவா, பல பண் தரும் நரம்புண்டு...'' என்பதாகும். அதில் ''உன்னருள் பேரொளி நடுவினிலே நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்'' என வருகின்ற சொற்றொடர் மனிதர் ஒவ்வொருவரும் ஒளிவீச முடியும் என்பதைக் கவிதை நயத்தோடு எடுத்தியம்புகிறது. வான்திரையில் கோடிக்கணக்கான விண்மீன்கள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தாலும் அங்கே மனிதர் ஏற்றுகின்ற ஒரு சிறு விளக்கும் பிரகாசமாக ஒளிவீச வேண்டும். மனிதர் தம் வாழ்வு என்னும் விளக்கை ஏன் மூடி வைக்கிறார்கள்? பிறர் தம்மைப் பற்றிக் குறைகூறுவார்களோ என்னும் அச்சம் ஒரு காரணமாகலாம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவையும் காரணமாகலாம்.

நம் வாழ்க்கை என்னும் விளக்கு அணைந்துபோகும் நிலை ஏற்பட்டால் அப்போது அதைத் திரும்பவும் தூண்டிவிட நாம் பிறருடைய உதவியை நாட வேண்டும். அதுபோல, பிறருடைய விளக்கு அணைந்துபோகும் ஆபத்து ஏற்படும்போது அவர்களுடைய விளக்கு அணைந்துவிடாமல் இருக்க நாம் துணையாக வேண்டும். இவ்வாறு ஒருவர் மற்றவருக்கு உதவியாக இருந்தால் உலகின் ஒளியாக வந்த இயேசுவை (காண்க: யோவான் 8:12) எல்லா மனிதரும் அறிந்துகொள்ள நாமும் கருவியாக மாறுவோம். நம் வாழ்க்கை என்னும் விளக்கு ஏற்றப்பட்டு, ஒளிவீசுவதற்கு மூலகாரணமாக இருப்பவர் ''அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற கடவுள்'' (காண்க: 1 திமொத்தேயு 6:16) என நாம் உணர்ந்தால் அந்த ஒளியில் எல்லாரும் பங்கேற்க வேண்டும் என்னும் ஆவல் நம் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும். அதுவே பிறருடைய வாழ்வு ஒளிமயமானதாக மாறிட ஒரு மாபெரும் தூண்டுதலாகவும் அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வு பிறருக்கு ஒளிதருகின்றதாக மாறிட அருள்தாரும்.