யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் சனிக்கிழமை
2018-09-15




முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.
திருப்பாடல்31: 1-2. 2-3. 4-5. 14-15. 19

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். 2யb உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். பல்லவி

2உ எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன்'' என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்'' என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு நிக்கதேமைப் பார்த்து, 'பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்' என்றார்'' (யோவான் 3:14-15)

பழைய ஏற்பாட்டு எண்ணிக்கை நூல் ''வெண்கலப் பாம்பு'' பற்றிப் பேசுகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பாலைநிலத்தில் பயணமாகிச் சென்ற வேளையில் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அப்போது கடவுளின் கட்டளைப்படி மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி உயர்த்துகிறார். அந்த வெண்கலப் பாம்பை ஏறிட்டுப் பார்த்தோர் உயிர்பிழைக்கின்றனர் (காண்க: எண் 21:4-9). இந்நிகழ்ச்சியை இயேசு நிக்கதேமுக்கு நினைவூட்டுகிறார். இயேசுவும் சிலுவை என்னும் மரத்தில் ''உயர்த்தப்படுவார்''. அவருடைய சிலுவைச் சாவு துன்பதுயரத்தின் வெளிப்பாடு மட்டும் அல்ல, அவர் அடைகின்ற மாட்சியும் அதில் அடங்கும். எனவே இயேசு சிலுவையில் ''உயர்த்தப்பட்டார்''; அதாவது இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய உயிர்த்தெழுதலும் மாட்சிமைக்கும் வழியாயிற்று. அதே நேரத்தில் இயேசு நமக்கு வாழ்வளிக்கிறார். இவ்வாழ்வு மண்ணுலகில் நாம் சாகாமல் வாழ்வதைக் குறிப்பதல்ல; மாறாக, விண்ணகத்தில் நாம் ''நிலைவாழ்வு'' பெறுவதைக் குறிக்கிறது. இந்த நிலைவாழ்வு கடவுளின் ஆட்சியில் நாம் பெறவிருக்கின்ற பங்கேற்பைக் குறித்துநிற்கிறது.

இயேசுவின் சிலுவைச் சாவின் வழியாக நாம் நிலைவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை'' கொள்ளவேண்டும். இந்நம்பிக்கை எதில் அடங்கியுள்ளது என்பதை இயேசுவே நமக்கு அறிவிக்கிறார். அதாவது, கடவுள் நம்மை அன்புசெய்து நம் மீட்புக்காகத் தம் திருமகனைக் கையளித்துள்ளார் என்னும் உண்மையை நாம் உளமார ஏற்று, அந்த அன்புக் கடவுளால் வழிநடத்தப்பட நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு கடவுளை அணுகிச் செல்வோர் அவரிடத்தில் நம்பிக்கை கொள்வர்; அவர் அனுப்பிய மீட்பராம் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வர். இந்நம்பிக்கை நம்மில் ஒரு மாற்றத்தைக் கொணர்கின்றது. அதாவது இயேசுவின் வல்லமையாகிய தூய ஆவி நமக்கு அருளப்பட்டு நாம் கடவுளின் பிள்ளைகளாக ஏற்கப்படுகிறோம். கடவுளின் உயிர் நமக்கு வழங்கப்படுகிறது. அந்த அன்புப் பிணைப்பினால் நாம் ''நிலைவாழ்வு'' என்னும் கொடையைக் கடவுளிடமிருந்து பெறுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை நம்பிக்கையோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.