யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வியாழக்கிழமை
2018-09-13




முதல் வாசகம்

நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1b-7,11-13

சகோதரர் சகோதரிகளே, நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால் அன்பு உறவை வளர்க்கும். தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறியவேண்டிய முறையில் எதையும் அறிந்துகொள்ளவில்லை. கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார். இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்: `இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை', `கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை' என்று நமக்குத் தெரியும். விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்; தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர். ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச்சான்று வலுவற்றதாய் இருப்பதால் அது கறைபடுகிறது. இவ்வாறு இந்த `அறிவு' வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா? இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக் கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ண மாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்க மாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும்.
திருப்பாடல் 139: 1-3. 13-14. 23-24

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

23 இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். 24 உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள். உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'உங்கள் பகைவர்களிடம் அன்புகூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார்'' (லூக்கா 6:27-28)

அன்பு என்றால் என்ன? இக்கேள்விக்கு இயேசு வழங்கும் பதில் புரட்சிகரமானது. அன்பு பற்றிய விளக்கங்களை நாம் திருக்குறளில் காணலாம்; பண்டைக்கால கிரேக்க, உரோமை இலக்கியங்களில் பார்க்கலாம். பொதுவாக அன்பை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். முதலில் குடும்ப உறவுகளின் அடிப்படையில் எழுகின்ற அன்பு. இதில் பெற்றோர்-பிள்ளைகள் அன்பு, சகோதரர் அன்பு போன்றவை அடங்கும். இரண்டாவது காதலர்கள் நடுவே நிலவும் அன்பு. இது பற்றித் திருக்குறள் காமத்துப் பால் விரிவாகப் பேசுகிறது. மூன்றாவது நண்பர்களுக்கிடையே நிலவும் அன்பு. இந்த அன்பின் வகைகளில் எல்லாம் தெரிகின்ற ஓர் அடிப்படையான அம்சம் ''அன்பு செய்வோர் ஒருவர் ஒருவருடைய நலனில் அக்கறை கொள்வார்கள்'' என்பதாகும். இயேசு அன்புக்கு வழங்கிய வரையறை மனித உறவுகளின் அடிப்படையையும் தாண்டிச் செல்கிறது. கடவுள் மனிதருக்குக் காட்டுகின்ற அன்புதான் மனிதர் ஒருவர் ஒருவர் மட்டில் காட்டுகின்ற அன்புக்கு அளவீடாகத் துலங்க வேண்டும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும் என்னும் கட்டளையை இயேசு தருகிறார். இது சாதாரண மனித இயல்பைத் தாண்டிச் செல்லும் ஒரு கோரிக்கை. பிறர் நமக்குத் தீங்கிழைத்தால் அவர்களுக்கு அதே பாணியில் நாமும் தீங்கிழைப்பது சரியே என்பது ''உலகப் போக்கு''. ஆனால் கடவுளின் பார்வை வேறுபட்டது. அவருடைய அன்பு எல்லா மனிதருக்கும் வழங்கப்படுகின்றது. தம்மை ஏற்போரையும் மறுப்போரையும் அவர் அன்பு செய்கிறார். தம் கட்டளைகளை மீறி நடந்து, பிற மனிதருக்குத் தீங்கிழைக்கின்ற மனிதரையும் கடவுள் அன்புசெய்கிறார்.

அதே பாணியில் நம் அன்பு அமைய வேண்டும் என்பது இயேசுவின் போதனை. இங்கே மூன்று அம்சங்கள் உள்ளன, அன்பு என்பது நம் உள்ளத்திலிருந்து எழுகின்ற உணர்வு. இந்த அன்புணர்வு பகைவர் மட்டிலும் காண்பிக்கப்பட வேண்டும். உணர்விலிருந்து பிறப்பது நாம் பேசுகின்ற சொல். பகைவரை நாம் சபித்தல் ஆகாது; மாறாக அவர்கள் ''வாழ்க'' என நாம் ஆசி கூற வேண்டும். பகைவருக்கு எதிராக நாம் செயல்படாமல் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இறுதியாக, பகைவருக்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும். இவ்வாறு இயேசு பகைவர் மட்டில் நாம் கொள்ள வேண்டிய அன்பை மிக ஆழமான விதத்தில் எடுத்துக் கூறுகிறார். உணர்விலும், சொல்லிலும், செயலிலும், இறைவேண்டலிலும் நாம் பகைவரை அன்பு செய்வது வெளிப்பட வேண்டும் (லூக் 6:27-28). அப்போது கடவுள் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்புசெய்வது போல நாமும் அன்புடையவர்களாக மாறுவோம். இயேசு வழங்குகின்ற இந்தப் புரட்சிகரமான ''அன்புக் கட்டளை'' ஒரு பெரிய சவால் என்பதில் ஐயமில்லை.

மன்றாட்டு:

இறைவா, பகைவரையும் அன்புசெய்கின்ற இதயத்தை எங்களுக்குத் தந்தருளும்.