யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் புதன்கிழமை
2018-09-12

மரியாவின் திருப்பெயர்




முதல் வாசகம்

எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19,22-27

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்குபெற வேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
திருப்பாடல் 84: 2. 3. 4-5. 11

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. பல்லவி

3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். 5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. பல்லவி

11 கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ``பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர். நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்: அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார்' என்றார்'' (லூக்கா 6:47-48)

லூக்கா நற்செய்தியாளர் இயேசு வழங்கிய போதனையின் ஒரு பகுதியை ஒரு பேருரையாகப் பதிவு செய்துள்ளார். அதுவே ''சமவெளிப் பொழிவு'' என வழங்கப்படுகிறது (லூக் 6:20-49). அப்பொழிவின் இறுதியில் இயேசு தம்மை நாடி வந்து, தம்மிடம் கல்வி கற்றுத் ''தேர்ச்சி பெற'' விரும்புவோர் எத்தகையோராய் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். அதாவது, இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவோர் அவரிடம் ''செல்ல வேண்டும்''; அவருடைய வார்த்தைகளைக் ''கேட்க வேண்டும்''; அவற்றின்படி ''செயல்பட வேண்டும்'' (காண்க: லூக் 6:47). இதற்குப் பதிலாக, வெறுமனே ''ஆண்டவரே, ஆண்டவரே'' எனக் கூறிக்கொள்கின்ற சீடர் கல்வி கற்பதுமில்லை; தேர்ச்சி பெறுவதுமில்லை (லூக் 6:46). இதை இயேசு ஓர் உவமை வழி உணர்த்துகிறார். வீடு கட்டும்போது சரியான அடித்தளம் இட வேண்டும் என்பதும், ஆழ்ந்த அடித்தளம் இல்லாத வீடு புயலும் வெள்ளமும் வரும்போது இடிந்து விழும் என்பதும் அனுபவ உண்மை. இயேசுவும் அவருடைய போதனையும் நம் வாழ்வுக்கு ''அடித்தளம்'' ஆகும். அந்த உறுதியான பாறைமேல் அடித்தளம் அமைத்துக் கட்டப்படுகின்ற வீடு நம் வாழ்க்கையைக் குறிக்கும். அந்த வாழ்க்கையின் முக்கிய அம்சம் நாம் இயேசுவை ''அணுகிச் செல்வதில் அடங்கும்'' (லூக் 6:47). தொடக்க காலத்தில் இயேசு தம் சீடர்களைத் தாமே தேர்ந்துகொண்டார். ஆனால் இயேசுவின் மண்ணக வாழ்வுக்குப் பின் அவருடைய சீடராக விரும்பியோர் அவரைத் ''தேடிச் சென்றனர்''. இவ்வாறு சீடர்களாக மாறியோர் நல்ல சிந்தனை கொண்டவர்களாக, நேர்மையான உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் (லூக் 6:45). சிந்தனை நல்லதாக இருக்கும்போது நம்மிடமிருந்து புறப்படுகின்ற ''சொற்களும்'' நல்லவையாக இருக்கும். பிறரோடு உறவாடுவதற்கு மனித மொழி முக்கியமானது. ஆனால் கடவுளின் வார்த்தையை நாம் மேலெழுந்தவாரியாக மட்டுமே கேட்டுவிட்டுப் போய்விடலாகாது.

கடவுளின் வார்த்தையை இயேசுவின் வழியாகக் கேட்கின்ற சீடர்கள் உண்மையாகவே அந்த வார்த்தையின் உட்கிடக்கையை நன்முறையில் உள்வாங்கிட வேண்டும். அப்போது கடவுளின் வார்த்தை நன்னிலத்தில் தூவப்பட்ட விதைபோல ஆழ வேரூயஅp;ன்றி வளரும். இத்தகைய நல்லுணர்வோடு கடவுளின் வார்த்தையை உள்ளார்ந்த விதத்தில் கேட்கின்ற சீடர் அந்த வார்த்தையின்படி ''செயல்படுவார்''. எனவே இயேசு தம்மைப் பின்செல்ல விரும்புவோர் தம் போதனையை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்கின்றார். அப்போது நாம் நற்கனி தருகின்ற மரத்திற்கு ஒப்பாவோம். நம் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் கடவுளுக்குப் புகழும் பிறருக்கு நலனும் கொணர்வனவாக அமையும். இதுவே உண்மையான ''சீடத்துவத்தின் இலக்கணம்''.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வு இயேசு என்னும் உறுதியான அடித்தளத்தின் மீது அமைந்த வீடாக விளங்கிட அருள்தாரும்.