யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் திங்கட்கிழமை
2018-09-10




முதல் வாசகம்

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன். நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம். நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
திபா 5: 4-5. 5b-6. 11

4 நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5ய ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். பல்லவி

5b தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி

11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து நடுவே நில்லும்!'' என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, ``உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, ``உமது கையை நீட்டும்!'' என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்'' (மாற்கு 7:33)

யூத இனத்தைச் சேராத பிற இன மக்கள் வாழ்ந்த பகுதி தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகும். இயேசு அப்பகுதிகளுக்குச் சென்றார் என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 7:31). அங்கே பிற இனத்தைச் சார்ந்த ஒருரை - காது கேளாவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை - இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்குக் குணம் நல்கிய நிகழ்ச்சியை மாற்கு தத்ரூயஅp;பமாகச் சித்தரிக்கிறார். அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் இல்லை, கேள்வித் திறனும் இல்லை. தாம் போதித்தவற்றை மக்கள் கவனமாகக் ''கேட்க வேண்டும்'' என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மாற் 7:6). அவரிடம் வாய்திறந்து சாதுரியமாக ''பேசிய'' ஒரு பெண்ணின் கோரிக்கையை இயேசு நிறைவேற்றி வைத்தார் (காண்க: மாற் 7:24-30). இப்போது இயேசு ஒரு மனிதருக்குப் ''பேசும்'' திறனையும் ''கேட்கும்'' திறனையும் அளிக்கிறார். ''பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது'' (சாஞா 10:21) என்னும் இறைவாக்கின் அடிப்படையில் இயேசு அம்மனிதருக்கு உள்ளறிவையும் ஞானத்தையும் அளித்தார் எனலாம்.

தனியே அழைத்துச் செல்லுதல், விரல்களைக் காதுகளில் இடுதல், உமிழ்நீரால் தொடுதல் ஆகிய செயல்களை மாற்கு குறிப்பிடுவதன் வழியாக இயேசு உண்மையிலேயே ஒரு ''மருத்துவராக'' செயல்பட்டார் என அறிகிறோம். ஆனால் வெளி அடையாளம் என்பது உள் எதார்த்தத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசு அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் கேள்வித் திறனும் வழங்கிய போது அந்த மனிதரின் உள்ளத்தைத் திறந்தார்; அவருடைய இதயத்தைத் திறந்தார்.அதைத் தொடர்ந்து, கடவுளின் வார்த்தையைக் ''கேட்கவும்'' அதைப் ''பேசவும்'' அந்த மனிதர் முன்வந்தார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நமக்கு இத்தகைய கேள்வித் திறனையும் பேச்சுத் திறனையும் நல்குவார். அப்போது நாம் இயேசுவை மாயஜாலம் நிகழ்த்துகின்ற அதிசய மனிதராகப் பார்க்காமல் கடவுளின் அன்பை நம்மோடு பகிர்கின்ற இறைமகனாக நம்பி ஏற்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு இறைஞானம் அளித்து நல்வழி காட்டும் இயேசுவிடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள அருள்தாரும்.