யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் வியாழக்கிழமை
2018-09-06




முதல் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-23

சகோதரர் சகோதரிகளே, எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, ``ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.'' மேலும் ``ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.'' எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.
திருப்பாடல் 24: 1-2. 3-4 5-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

அக்காலத்தில் இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, ``ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ``அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்' என்றார்'' (லூக்கா 5:8)

கடவுள் புனிதம் நிறைந்தவர்; தூய்மைக்கு ஊற்றாக இருப்பவர். அவர் முன்னிலையில் எல்லா மனிதருமே குறையுள்ளவர்கள்தாம். பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, என்னை விட்டுப் போய்விடும் என்று ஏன் கூறினார்? இயேசுவின் சொல்லிலும் செயலிலும் கடவுளின் வல்லமை துலங்கியதைப் பேதுரு கண்டுகொண்டார். ஆகவே, இயேசுவின் முன்னிலையில் நிற்கவும் தனக்குத் தகுதியில்லை என பேதுரு நினைத்தார். இரவு முழுதும் அயராது உழைத்த பிறகும் மீன்பாடு இல்லாததால் மனமுடைந்து போயிருந்த பேதுரு இயேசுவின் சொற்படி ''ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய் வலை வீசியதும்'' பெருந்திரளான மீன்களைப் பிடித்தார் (லூக் 5:4,6). இயேசுவின் சொல் வல்லமை மிக்கது எனக் கண்டுகொண்ட பேதுரு தன் தகுதியின்மையை உணர்கிறார்.

கடவுளின் முன்னிலையில் நிற்பதற்கு மனிதருக்குத் தகுதி உள்ளதா என்னும் கேள்விக்கு நாம் இருவிதமாகப் பதிலளிக்கலாம். மனிதர் கடவுளுக்கு நிகரானவர்கள் அல்ல. கடவுளே மனிதரை உலகில் படைத்து அவர்களுக்கு வாழ்வளித்துக் காப்பவர். எனவே, நாம் எப்போதுமே கடவுளை நம்பியே வாழ்கின்றோம். கடவுள் நம்மைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லை. இருப்பினும், கடவுளின் திட்டப்படி, மனிதர் தனிச்சிறப்பான விதத்தில் படைக்கப்பட்டுள்ளார்கள். மனிதர் தம்மோடு எந்நாளும் நல்லுறவிலும் அன்புப் பிணைப்பிலும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் நம்மைப் படைத்தார்; நம்மைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டார்; நம்மைத் தொடர்ந்து பாதுகாத்து வழிநடத்தி வருகின்றார். எனவே, நாம் கடவுளின் முன்னிலையில் நிற்க நமக்குத் தகுதியை அவரே நமக்கு வழங்கியுள்ளார். இத்தகுதி நம் சொந்த முயற்சியாலோ சக்தியாலோ நமக்குக் கிடைப்பதல்ல; மாறாக, கடவுளே நமக்கு மாண்பையும் உயர்வையும் அளித்து நாம் அவரோடு எந்நாளும் இணைந்து பேரின்பம் துய்த்திட நமக்கு வழிவகுத்துள்ளார். இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெற்றுள்ள இந்த மாண்பும் உயர்வும் எல்லா மனிதருக்கும் உரித்தானதே என உணர்ந்து செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு அளிக்கின்ற மாண்புக்கு ஏற்ப நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.