யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் புதன்கிழமை
2018-09-05




முதல் வாசகம்

நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9

சகோதரர் சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? ஏனெனில், ஒருவர் `நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றும் வேறொருவர் `நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல்33: 12-13. 14-15. 20-21

2 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி

14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார். கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், ``நீர் இறைமகன்'' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார். பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், ``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்' என்றார்'' (மாற்கு 1:38)

மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தார் இயேசு. அவ்வேளைகளில் இயேசு தம்மோடு தொடர்ந்து இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பியதுண்டு. எனவேதான் சீடர்கள் இயேசுவிடம் சென்று, ''எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள் (மாற் 1:37). ஆனால் இயேசு ஒருசில மனிதரை மனமாற்றம் அடையச் செய்தால் போதும் என்றோ, அவர்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவித்தால் போதும் என்றோ நினைக்கவில்லை. அவர் மேலும் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; மேலும் பல மக்களைச் சென்றடைய வேண்டும்; மேலும் பலரை இறையாட்சியின் அரவணைப்பில் கொண்டு வர வேண்டும் என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டார். எனவே, ''நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'' என்றார். இயேசு பல ஊர்களுக்குச் சென்று போதித்தாலும் அவருடைய நடமாட்டம் கலிலேயா பகுதியிலும் எருசலேம் பகுதியிலும் மட்டுமே நிகழ்ந்தது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாம் இயேசுவின் கால்களாக, கைகளாக, ஏன் இயேசுவின் உடலாக இருக்கின்றோம் என பவுல் அறிவுறுத்துகிறார் (காண்க: 1 கொரி 12:27; எபே 4:4-6). இத்தகைய உணர்வால் உந்தப்பட்டு, பவுல் போன்ற திருத்தூதர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். பிற்காலத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் போன்றோர் இந்திய நாட்டிற்கு வந்து மறையறிவித்தார்கள். எனவே, இயேசு ஊர் ஊராகச் சென்று போதித்த பணி இன்றும் தொடர்கிறது. நற்செய்தியைப் பறைசாற்றுவோர் இயேசுவைப் பின்பற்றி ''அடுத்த ஊர்களுக்கும்'' போக அழைக்கப்படுகிறார்கள். ஒரே இடத்தில், ஒரே தளத்தில் வேரூயஅp;ன்றி விடாமல் வெவ்வேறு மக்களை அணுகிச் சென்று அவர்களையும் இறையாட்சியின் அரவணைப்பில் கொணர்ந்திட முயல வேண்டும் என்பதை இயேசுவின் பணி நமக்கு உணர்த்துகிறது. இதனால் நாம் பயணம் சென்று தொலைநாடுகள் செல்லவேண்டும் என்றில்லை; மாறாக, எங்கிருந்தாலும் அங்குள்ள அனைவருக்கும் வேறுபாடின்றி நற்செய்தியின் தூதுவர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்பதே பொருள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றியருளும்.