யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-09-04




முதல் வாசகம்

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ``ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?'' நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.
திருப்பாடல்145: 8-9. 10-11. 12-13 13-14

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

13 ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், ``ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று உரத்த குரலில் கத்தியது. ``வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, ``எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்துவந்தார்'' (லூக்கா 4:31)

நாசரேத்திலிருந்து இயேசு கப்பர்நாகும் என்னும் ஊருக்குச் செல்கிறார். கலிலேயாக் கடலின் வட மேற்குப் பகுதியில் அமைந்த ஊர் கப்பர்நாகும். அங்கே மீன்பிடித்தல் மும்முரமாக நடந்துவந்தது. அவ்வூரில் இருந்த தொழுகைக் கூடத்திற்கு இயேசு செல்கிறார். மக்களுக்கு மீட்பளிக்க வந்த இயேசுவின் பணி நோயாளருக்கு நலம் வழங்கும் பணியாகத் தொடங்குகிறது. தொழுகைக் கூடத்தில் ஓய்வு நாளன்று இயேசு போதித்துக்கொண்டிருக்கையில் பேய்பிடித்த ஒரு மனிதர் உரத்த குரலில் கத்துகிறார். இயேசு அந்த மனிதரைப் பிடித்திருந்த பேயை அதட்டி வெளியேறச் செய்கிறார். அந்த மனிதரும் குணமடைகிறார். இயேசு புரிந்த முதல் புதுமையாக மாற்கு, லூக்கா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர் (காண்க: லூக் 4:33-37; மாற் 1:21-28). இதன் பொருள் என்ன? பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்த அலகை உலக அரசுகள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாகவும் கூறி, ''நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது (லூக் 4:5-7). ''நீர் இறைமகன் என்றால் இந்தக் கல்லை அப்பமாகும்படி கட்டளையிடும்'' என அலகை கேட்டது. ஆனால் இயேசு அலகையின் சோதனையை முறியடித்து, தமக்குக் கடவுள் அளித்த அதிகாரம் உண்டென நிலைநாட்டினார். கப்பர்நாகும் ஊரில் பேய் இயேசு ''கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' எனத் தனக்குத் தெரியும் என்று கூறுகிறது (லூக் 4:34). நற்செய்தி நூல்களில் ''அலகை'' (''சாத்தான்'') என்பது கடவுளை எதிர்த்து நிற்கின்ற தீய சக்தியாக விளக்கப்படுகிறது. ''பேய்கள்'' என்பவை அலகைக்குக் கீழ் பணிபுரிகின்ற, தாழ் நிலை ஊழியர்களாகக் காட்டப்படுகின்றன. இயேசு அலகையின் ஆட்சியை ஒழிக்க வந்தார் என்னும் உண்மையை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன.

கடவுளின் ஆட்சியை நிலைநாட்ட வந்த இயேசு அலகையின் ஆட்சியை முறியடிப்பார். எனவே, இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே நிகழ்கின்ற போர் இயேசுவின் பணித் தொடக்கத்திலிருந்தே நடந்தது. பேய்பிடித்திருந்த மனிதர் குணமடைந்ததும் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்கள் ''திகைப்படைந்தனர்'' (லூக் 4:36). ''எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!'' என்று கூறி அவர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர் (லூக் 4:36). ஆனால் அவர்கள் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டதாக'' லூக்கா குறிப்பிடவில்லை. இயேசு புரிந்த இப்புதுமையில் இரு முக்கிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில், இயேசு ''அதிகாரத்தோடு'' போதிக்கவும், கடவுளிடமிருந்த பெற்ற அதிகாரத்தோடு பேய்களை முறியடிக்கவும் செய்கிறார். எனவே, இயேசுவின் போதனையும் அவர் புரியும் புதுமையும் கடவுளின் சக்தியை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது, கடவுளின் சக்தி இயேசு வழியாக வெளிப்பட்டதைக் கண்டபோதிலும் மக்கள் வியப்படைகிறார்களே தவிர இயேசுவை நம்பி ஏற்க முன்வரவில்லை. நாமும் இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்குவதைக் கண்டு வியப்படைவதோடு நின்றுவிடாமல் அவரே நமக்கு நலமளிக்கின்ற ''மருத்துவர்'' என்றும் நம்மைத் தீய சக்திகளிடமிருந்து ''மீட்பவர்'' என்றும் ஏற்று, அவரிடத்தில் ''நம்பிக்கை கொள்ள'' அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமையை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.